கோவிட்19 இந்தியா: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,670 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1395 ஆகவும் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மூன்றாம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படாத இடங்களுக்கு மத்திய அரசு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது.
எனினும் மற்ற தடைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. தலைநகர் டில்லியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடைளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி இயல்பு நிலைக்கு திரும்ப தயாராக உள்ளதாகவும், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில், 13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், இதுவரை 548 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.