தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம்: லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணமடைந்தனர்.
உயிரிழந்த 3 பேரில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா-சீனா எல்லையான லடாக் பகுதியில், இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் தி.கே.பழனி இன்று உயிரிழந்துள்ளார்.
இரவு, பகல் என்றும் பாராமல் தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடு நம் நாட்டின் பாதுகாப்பு பணியில் தம்மை அர்ப்பணித்து கொண்டு வீர மரணம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீர பழனி அவர்களின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டின் நலனுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி அவர்களது குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அன்னாரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
வீர மரணம் அடைந்த திரு பழனி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிதலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.