விஷ வாயு கசிவு, நிவாரணம் அறிவித்தது ஆந்திர அரசு. விஷ வாயு கசிவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள LG POLIMERS ஆலையிலிருந்து வியாழன் அதிகாலை 3 மணியளவில் விஷ வாயு கசிந்தது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இதன் பாதிப்பு பரவியுள்ளது.
அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் விஷ வாயு கசிந்துள்ளது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மயங்கி விழுந்தனர்.
சிலர் வெளியில் வந்தபோது வீதிகளில் மயங்கி விழுந்துள்ளனர். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த விஷ வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1-கோடி ரூபாய் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சாதாரண பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக பூட்டியிருந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஸ்டைரின் எனப்படும் விஷ வாயு கசிந்துள்ளது.
ஆலையில் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் திராவ வடிவில் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 20 டிகிரி செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் தொட்டியில் இருந்த திரவம் வாயுவாக மாறியுள்ளது.
சேமிப்பு தொட்டியின் மேல்மூடி கழன்றுள்ளது. இதை என்ஜினீயர் வந்து சரி செய்வதற்குள் வாயு வெளியே கசிந்துள்ளது. இந்த நச்சு வாயு, நுரையீரல் மற்றும் நரம்புமண்டலத்தை சேதப்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கோபால்பட்டினத்திற்கு அருகில் தான் ஆர்.ஆர்.வெங்கடாபுரம் பகுதியில் தான் இந்த ஆலை உள்ளது.
இந்த ஸ்டெரின் விஷ வாயுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த PTBC எனப்படும் வேதிப்பொருள் குற்றத்திலிருந்து ஆந்திராவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.