புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி திங்கட்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(NDMA) மற்றும் உள்துறை அமைச்சகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுடனான கூட்டத்தில் அதிதீவிர ‘ஆம்பன்’ புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
20ஆம் தேதி கரையை கடக்கும்
இந்த அதி தீவிர புயலானது மே 20ஆம் தேதி மதியம் மேற்கு வங்காள கடற்கரையில் அதிவேக கற்றுடன் கரையை கடக்கும். கரையை கடக்கும் பொழுது ஒருமணி நேரத்திற்கு 195 கிலோ மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் அதிக மழைபொழிவு மற்றும் அதிக பாதிப்புகளை உண்டாக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை(IMD) தெரிவித்திருந்தது.
“தேசிய பேரிடர் மீட்பு குழு” அனுப்பிவைக்கப்பட்டது
“தேசிய பேரிடர் மீட்பு குழு” வை பொருத்த மட்டில், 37 குழுக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கான இடைப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒடிசாவில் 7 மாவட்டங்களுக்கும் மற்றும் மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ள இந்நேரத்தில் புயலையும் சமாளிப்பது இரட்டை சவால்கள்” என பேரிடர் மீட்பு குழுவின் பொது இயக்குனர், எஸ். என் பிரதான் தெரிவித்தார்.
4 முதல் 5 மீட்டர் உயர அலைகள்
இந்த புயல் கரையை கடக்கும் நேரத்தில் அதிகபட்சமாக 4 முதல் 5 மீட்டர் உயர அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மோடி உத்தரவு
“பிரதமர் மோடி மக்களை புயல் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் இருந்து வெளியேற்றவும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போதிய இருப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளார்,” என உள்துறை அமைச்சகத்தினால் தெரிவிக்கப்பட்டது.