இந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
புதுடில்லி: உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 196 நாடுகளில் இதுவரை 5.25 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3,39,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா நோய் தொற்றுக்கு 1,31,868 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 3,867 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் இந்தியாவில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இதுவே உச்ச எண்ணிக்கை ஆகும்.
கடந்த மூன்று நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 3 நாட்களில் 18,000 அதிகமான புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
நேற்று மட்டும் இந்தியாவில் 147 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் 3,867-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதில் அதிகப்படியாக நேற்று 6,767 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து அதிகரித்துவரும் நோய் தொற்று காரணமாக மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
சிகப்பு மண்டலங்களில் விமான சேவை துவங்கப்படுவது என்பது தவறான முடிவு என மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டிலேயே 47,000 க்கும் அதிகமான நோய் தொற்று பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் இருந்துவருகிறது. இங்கு இதுவரை 1,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா கொரோனா பரிசோதனைகளை 100 மடங்கு உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு என்ற எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 41.28 சதவிகிதமாக உள்ளது. உலகளவில் அதிகப்படியாக அமெரிக்காவில் 2,57,154 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.