இந்தியாவில் 80000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை. நேற்று இந்தியாவில் பதிவான புதிய தொற்றுகளின் எண்ணிக்கையால் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 80,719 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா: இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 80000-ஐ கடந்துள்ளது. நேற்று மாலை 11 மாவட்டங்களிலிருந்து சோதனை முடிவுகள் பெறப்பட்டன.
இவற்றின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,719 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் 10000 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு இதுவரை 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை அடுத்து தமிழ்நாடு கொரோனா நோய் தொற்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 9,674 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து 9,267 என்ற எண்ணிக்கையுடன் குஜராத் 3-ம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 447 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று மட்டும் தமிழகத்தில் 11,956 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று 472 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதால் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 8,470 என்ற நிலையில் தலைநகர் டெல்லி 4-ம் இடத்தில் உள்ளது.
டெல்லியில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருமடங்காகியுள்ளது. இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தியதால் தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகப்படியாக கண்டுபிடிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று 134 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் மகாராஷ்டிரா 54, குஜராத் 29, டெல்லி 20, மேற்கு வங்கம் 9,
மத்திய பிரதேசம் 7, ராஜஸ்தான் 4 பேர் ஆவர். இவர்களில் 70% பேர் நீண்ட கால நோய் மற்றும் கடுமையான நோய் பாதிப்புகளில் இருந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று 363 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.91 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.