பிரதமர் மீது சோனியா காந்தி கடும் விமர்சனம். பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி தொகுப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், “பிரதமர் அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு என்பது நகைப்புக்குரிய ஒன்றே அல்லாமல் வேறொன்றும்” இல்லை என விமர்ச்சித்துள்ளார்.
காணொளி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பேசிய சோனியா காந்தி, “தற்போதுள்ள சூழலில் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திற்கு மட்டும்தான் உள்ளன. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏழை மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கிட வேண்டும் என பல்வேறு வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மோடி அறிவிக்கிறார்.
நிதியமைச்சர் இதனை 5 நாட்களாக மக்களுக்கு விளக்கிவருகிறார். இது நாட்டையே நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 21 நாட்களில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் கொரோனாவின் பரவல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்ற நிலை தான் தற்போது உள்ளது.
இந்நிலையில் பொதுமுடக்கம் குறித்தோ அல்லது அதனை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தோ எந்த ஒரு நல்ல திட்டமும் அரசிடம் இல்லை. புறம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அரசால் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 13 கோடி குடும்பங்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரின் துயரத்தை துடைப்பதற்கான தீர்வு அரசிடம் இல்லை”. என பேசினார். இந்த காணொளி வாயிலான ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி பங்கேற்றார்.
மேலும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் பங்கேற்றனர். சிவசேனா கட்சியும் இந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்றது.
கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வுடன் இருந்த சிவசேனா கட்சி அண்மையில்தான் காங்கிரசுடன் இணைந்தது. இந்த கட்சி தற்போது தான் முதன் முதலாக காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறது.