நினைத்ததை அடைய ஈர்ப்பு விதி அவசியம்!
உலகில் இருக்கும் விதிகளில் மிகவும் சக்தி வாய்ந்த விதிகளில் இந்த ஈர்ப்பு விதியும் ஒன்று என்பது மறுக்கமுடியாத உண்மை.
புவிஈர்ப்பு விசையைப்போல நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்விலும் நம்முடன் பயணித்து வருகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் நாம் உருவாக்கிக்கொண்டே வருகிறோம் என்பது தான் உண்மை.
உருவாக்குதல் என்பதற்கு ஒரு முடிவே இல்லை. நம்முடைய எண்ணங்கள் நம்மை செயல்பட வைக்கிறது.
ஒவ்வொரு செயலும் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். வாழ்க்கையில் வெற்றி அடைந்த அனைவரும் பயன்படுத்திய ஒரு தாரக மந்திரமே இந்த ஈர்ப்பு விதி என்று கூறலாம்.
நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்முடைய எண்ணங்களால் உருவாக்கப்பட்டதே.
நம் வாழ்க்கையில் நினைத்ததை அடைய அதாவது பணம், பொருள், உறவு, பதவி மற்றும் விளையாட்டு எதுவாயினும் இந்த ஈர்ப்பு விதியை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே முடியும்.
நம்முடைய எண்ணங்களை நமக்கு எது தேவை என்று அறிந்து அதில் நம்பிக்கையுடன் நேர்மறையில் முயற்சி செய்தால் நீங்கள் கண்டிப்பாக அதை அடைவீர்கள் என்பதுதான் ஈர்ப்பு விதி.
உன்னுடைய வாழ்க்கையில் நீ எதானால் ஈர்க்கப்பட்டு உள்ளாயோ அதை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறாய் என்று பொருள்.
உன்னுடைய முழுமையான கவனத்தை ஒரு செயலில் நேர்மறையான எண்ணங்களுடன் நம்பிக்கையுடன் கொடுக்கும் பொழுது நீ எதிர்பார்த்த பலனை அடைவாய்.
நம்முடைய எண்ணங்கள்
எடுத்துக்காட்டாக புதிய தொழில் தொடங்குவதாக எடுத்துக்கொள்வோம். நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்குமானால், “நான் முதல் முறை தொழில் தொடங்கி உள்ளேன்.
இதை நான் முறையாக செய்து விடுவேனா? என்னால் இதை சமாளித்து விட முடியுமா? எனக்கு கீழே தொழிலாளிகளை பணி அமர்த்தி விடுவேனா?
இந்த முயற்சியை நான் நட்டம் இல்லாமல் செய்து முடித்து விடுவேனா? இதைச் சிறப்பாக கொண்டு செல்வதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவோமா?” இது போன்ற எதிர்மறையான எண்ணங்கள்தான் அனைவரிடமும் உள்ளது.
என்னுடைய சிந்தனைகள் அனைத்தும் எப்படி என்னுடைய தொழில் தோற்றுப்போகும் என்றுதான் உள்ளது. இது போன்ற பயத்துடன் கூடிய எதிர்மறையான எண்ணங்களே 99% பேர் தொழிலில் வீழ்ச்சி அடைவதற்கு காரணம் இதுவே.
எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் அதன் விளைவுகள்
நீங்கள் காதல் வலையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய காதலி நீங்கள் போன் செய்யும் பொழுது நேரத்திற்கு எடுப்பதில்லை.
நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் தகவல் செய்யும் பொழுதெல்லாம் தாமதமாக பதிலளிக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.
எங்காவது செல்லும் போது தாமதமாக வருவது. உங்கள் முன்னாடியே கால்மேல் கால்போட்டு உட்காருவது போன்ற செயல்கள் செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது, உங்கள் சிந்தனை எங்கு செல்லும். பெண் இவளே இந்த அளவுக்கு செய்தால், நான் ஆண் எந்த அளவுக்கு இருப்பேன் என்று காதலித்த சிறிது நாளிலேயே பிரிவினை ஏற்படும்.
ஆனால் நீங்கள், அவளிடம் இருக்கும் நல்ல குணங்களை ஒரு போதும் கவனித்தது கிடையாது. உங்களுக்குத் தெரியாமல் அவளிடம் பல்வேறு நல்ல குணங்களும் நோக்கங்களும் இருக்கலாம்.
வேறு ஏதாவது ஒரு செயலில் தன்னை ஈடுபடுத்தி உழைத்து கொண்டு இருப்பதால் உங்களிடம் நேரம் செலவிட முடியாமல் கூட போகலாம்.
மிகவும் எளிதாக ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்
இப்பொழுது ஒருவர் உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு அளிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த தருணத்தில் உங்களுடைய சிந்தனை அதில் இருக்கும் கஷ்டங்களை மட்டுமே பார்க்கும். அதில் இருக்கும் குறைகளை மட்டுமே பார்த்தால், நிறைகள் கண்களுக்குப் புலப்படாமல் போகும்.
எனக்கு இந்த போக்குவரத்து நெரிசல் பிடிக்கவில்லை! நான் வாங்கும் சம்பளம் எனக்கு போதவில்லை என்று புலம்புவது.
என்னுடைய உடலின் நிலமை எனக்கு மோசமாகிக்கொண்டே வருகிறது. என்னை எனக்கு பிடிக்கவில்லை நான் ஒல்லியாக அல்லது குண்டாக இருக்கிறேன்.
இது போன்ற சிந்தனைகளால், என்ன நிகழும் தெரியுமா?
ஈர்ப்பு விதியின்படி நீங்கள் எந்த ஒரு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறீர்களோ அந்த விஷயங்களால் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு நிகழ்வில் இருக்கும் குறைகளை மட்டுமே பார்க்கும் பொழுது உங்கள் ஆழ்மனதில் இந்த குறைகள் பதிந்து மனதளவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் சிந்தனைகள் குறைகளை மட்டுமே பார்க்க ஆரம்பித்து எதிர்மறையான எண்ணங்களில் மூழ்கி விடுவீர்கள்.
எதிர்மறையான எண்ணங்களால் குறைகளை மட்டுமே பார்த்து உங்களிடம் இருந்து எந்த ஒரு செயலும் வெளிப்படாது. பதட்டம், தலைவலி, பயம் போன்று மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுவீர்கள்.
ஈர்ப்பு விதி பயன்படுத்தும் முறை
எது உங்களுக்கு தேவையோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து சரியான தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு வேண்டியது உங்களை வந்தடையும் என்பதே ஈர்ப்பு விதி.
உங்களுக்கு வருமானம் குறைவாக வந்தால் அதிக வருமானம் ஈட்ட என்ன வழி என்று நினைத்து முயற்சி செய்தால் மட்டுமே உங்களுக்கு அதிக வருமானம் தானாக வந்தடையும்.
உங்களுடைய இந்த நேர்மறையான எண்ணமே உங்களுக்கான வழியை அமைத்து கொடுக்கும். கடவுள் கூரையை பிழந்துகொண்டு வந்து கொடுத்தாலும் கொடுப்பார் யாருக்கு தெரியும்.
அனைத்து நிகழ்விலுமே நிறைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டால் எல்லாமே வெற்றி தான். நேர்மறையான எண்ணங்களே ஈர்ப்பு விதியின் உயிர் மூச்சு எனலாம்.
நேர்மறையான எண்ணங்களினாலே, உங்கள் ஆழ்மனதில் தேவைகள் மட்டுமே பதியும். தேவையானதில் மட்டுமே கவனம் செல்லும்.
ஈர்ப்புவிதியில் பெரும்பாலோனோர் ஏன் தோல்வியடைகின்றனர்?
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைவருக்குமே ஈர்ப்பு விதி பொருந்தும். அனைவராலும் பின்பற்ற இயலும். ஆனால் நாம் செய்யும் ஒரு சில தவறுகளால் இதை முறையாக பயன்படுத்த முடியாமல் போகிறது.
நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது. எந்த நேர்த்திலும் நான் இதற்கு சரிப்பட்டு வரமாட்டேன் போன்ற எண்ணங்கள் நம்மை ஒரு செயலை செய்ய விடாமல் தடுக்கிறது.
இரு மனதாக இருப்பது. நான் இதை செய்து முடிப்பேனோ, மாட்டேனோ அல்லது இது கிடைக்குமோ, கிடைக்காதோ போன்ற எண்ணங்கள் மற்றொரு காரணம்.
நம்முடைய எண்ணங்கள் எப்பொழுதும் நமக்குத் தேவையானதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
நன்றியுணர்வு எப்பொழுதுமே உங்களிடம் இருக்க வேண்டும். நன்றி இல்லாத எந்த ஒரு செயல், நிகழ்வு மற்றும் உறவு போன்றவை நீண்ட காலம் வராது.
எதிர்மறை எண்ணங்கள் அல்லது தேவை இல்லாததில் உங்கள் கவனத்தை செலுத்துவது தெளிவாக சொல்லப்போனால் ஒரு செயலில் இருக்கும் குறைகளை மட்டுமே பார்ப்பது.
பொறுமையின்மை மற்றொரு காரணம் ஆகும். பொறுமை கடலினும் பெரிது என்பது அனைவரும் அறிந்ததே. பொறுமை இல்லையெனில் ஈர்ப்பு விதியை முறையாக பயன்படுத்த இயலாது.
எண்ணமும் உணர்வும் ஒரே மாதிரி ஆக இருக்க வேண்டும். உணர்வுகள் வேறு மாதிரி ஆக இருப்பின் ஈர்ப்புவிதிக்கு புறம்பானது.
எண்ணங்களில் ஒரு பொருள் வேண்டும் என்று நினைத்து உணர்வில் வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் ஈர்ப்பு விதி உங்களுக்குப் பொருந்தாது.