தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது இதுவரையில் இல்லாத அளவிலான அதிகப்படியான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 618 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 11,334 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. மாநிலத்தில் 43 அரசு மற்றும் 28 தனியார் என 71 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று தமிழகத்தில் கொரோனா உறுதியான 874 பேரில் 518 பேர் ஆண்கள் மற்றும் 356 பேர் பெண்கள் ஆவர். நேற்று 765 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இதுவரை 11,313 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று தமிழகத்தில் 9 பேர் கொரோனா நோய் தொற்றிற்கு பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை அடுத்த மாவட்டங்களான செங்கல்பட்டில் 61 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும் நேற்று புதிதாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் புதிதாக கொரோனா யாருக்கும் உறுதியாகவில்லை. கோவை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் குணமடைந்துள்ளனர்.