சமூகப்பரவலின் வாசலில் தலைநகரம் சென்னை நின்றுகொண்டிருக்கிறது. கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்தவண்ணம் உள்ளது.
சென்னை: கடந்த 24 மணி நேர நிலவரப்படி இந்தியாவில் உறுதியான புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 2,573 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதனால் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 42,836 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,389 ஆகவும் அதிகரித்துள்ளது. 29,685 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,762 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று புதியதாக உறுதிசெய்யப்பட்ட தொற்றுகளில் தமிழ்நாட்டில் 527 உறுதியாகியுள்ளன. மொத்த நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 266 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள் மூலம் பரவியவை என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சென்னை கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் அடுத்தடுத்து அதிக எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகிறது.
இன்றுமுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில் இந்த உயர்வு சற்று பயத்தையே ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று கட்டுக்குள் தான் இருக்கிறது என நம்பப்பட்ட நிலையில் இந்த உயர்வு அச்சத்தையே அளிக்கிறது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் வந்து சென்ற வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலால் கொரோனா தொற்று கோயம்பேடு சந்தையில் விரைவாக பரவியது.
இதனால் இங்கு வியாபாரத்திற்காக வேறு மாவட்டங்களிலிருந்து வந்து சென்ற வியாபாரிகளால் மற்ற மாவட்டங்களிலும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இன்று முதல் கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் செயல்பட துவங்கியதால் மக்கள் எண்ணிக்கை பெருமளவில் காணப்பட்டது. இதனால் பலருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.