கீர்த்தனா மரணம்: கல்லூரி மாணவி கீர்த்தனா மரணமடைந்ததை அடுத்து அவர் எழுதி வைத்துச் சென்ற உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
சென்னை: திருவெற்றியூரைச் சேர்ந்த சாமுவேல் சென்னை குடிநீர் வாரியத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மகள் கீர்த்தனா (18) மணலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கதவு மூடப்பட்டது
காலேஜில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த கீர்த்தனா, நேராக தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கதவை நீண்ட நேரம் தட்டியும் மகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
கீர்த்தனா மரணம்
அதன்பிறகு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். மகள் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளனர்.
பெற்றோர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்த பின்பு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிரேத பரிசோதனை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார், கீர்த்தனாவின் அறையை சோதனை செய்தனர். அப்போது கீர்த்தனா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.
உருக்கமான கடிதம்
அக்கடிதத்தில் கீர்த்தனா எழுதியதாவது, என் அப்பா-அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர்.
ஆனால், நான் சரியாகப் படிக்கவில்லை. எனவே, தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேன். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்.
என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.