தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வரை 800 களில் இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 1,149 ஆக உயர்ந்துள்ளது.
அதிகப்படியாக சென்னையில் மட்டும் 804 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,980-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 757 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதானால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 12,757-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 13 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவிற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 12,049 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அரசு 43 மற்றும் தனியார் 29 என மொத்தம் 72 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு என தமிழநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டு 85, காஞ்சிபுரம் 16, திருவள்ளூர் 47 என சென்னையின் அருகில் உள்ள மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.
திருவண்ணாமலையில் 45 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 22,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.