சென்னை: ஐந்து வருட காத்திருப்புக்கு பிறகு ‘கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு’ புவிசார் குறியீடு(Geographical Indication,GI) அங்கீகாரம் கிடைத்தது.
தற்போது கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கத்தினர், கோவில்பட்டி மற்றும் தூத்துகுடியை சார்ந்த சில நகரங்கள் மற்றும் கிராமங்களை சார்ந்த உறுப்பினர்கள் இந்த புவிசார் குறியீட்டிற்கான உரிமையை பெறுகின்றனர்.
புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பூலோக பகுதியை சார்ந்த தனித்துவமான தரமுடைய பொருட்களுக்கு அளிக்கப்படும் ஒரு குறியீட்டு சான்றாகும்.
இந்த புவிசார் குறியீட்டு உரிமம் வைத்திருப்பவர்கள் அந்த பொருளுக்கான தனித்துவ தன்மைக்கு உரிமையாளராகின்றனர். வேறு எந்த பகுதியை சார்ந்தவர்களும் அல்லது இந்த புவிசார் குறியீட்டு உரிமம் இல்லாதவர்கள் இந்த பொருட்களை தயாரித்தல் குற்றமாக கருதப்படும்.
கோவில்பட்டி கடலை மிட்டாயின் தனித்தன்மை
இந்த புவிசார் குறியீட்டை வழங்கும் அமைப்பு, கோவில்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாய்களின் தனித்துவத்தை உணர்த்துவது அதை தயார் செய்ய பயண்படும் மூலப்பொருட்களாகிய கோவில்பட்டியின் கரிசல் மண்ணில் விளைந்த நிலக்கடலை, நாட்டு சர்கரை மற்றும் தாமிரபரணி நதியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகியன மற்றும் விரகு அடுப்பை அந்த பகுதியை சார்ந்தவர்கள் கடலை மிட்டாய் செய்யப் பயண்படுத்துவதாலும் இதற்கு இத்தகைய குறியீட்டை வழங்கியிருக்கிறது.
5 வருடங்கள் காத்திருப்புக்கு பின் கிடைத்த பெருமை
கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கத்தினரால் ஜுலை 3, 2014 ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டிற்கான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ ‘தடை ஏதும் இருக்குமானால் தெரிவிக்கலாம்(inviting objections if any)’ அறிவிப்பு நவம்பர் 29, 2019 அன்று புவிசார் குறியீட்டு மையத்தால் வெளியிடப்பட்டது.
அவ்வாறு தடை தெரிவித்தல் காலமாகிய 4 மாதங்களுக்குள் எந்த தடை விண்ணப்பமும் வராததால், தற்போது இந்த சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று இருப்பதாக பெருமையாக அப்பகுதியை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.