வில்சன் கொலை: பெங்களூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வில்சனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலைகாரர்களை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கேமரா
இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் இருவரும் தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருவரும் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம். நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த ரபீக் என்பதும் தெரியவந்தது.
கொலையாளி ரபீக் கைது
ரபீக் என்பவரை கேரள போலீசார் பூந்துறையில் வைத்து கைது செய்துள்ளனர். அப்துல் சமீம் இன்னும் போலீசாரிடம் சிக்கவில்லை.
தமிழக உளவுப்பிரிவு, மத்திய உளவுத்துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில், ரபீக் இடம் இருந்து அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
குடியரசு தின விழாவினை சீர்குலைக்க திட்டம் தீட்டி பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
மீதம் உள்ள ஒரு குற்றவாளி கேரளாவில் உள்ள பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என சந்தேகித்து கேரள போலீசார் தேடுதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.