சென்னை: ஜீன் 15 இல் ஆரம்பிக்கப்பட இருந்த 10ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக செவ்வாய் கிழமை தமிழக அரசு அறிவித்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரவல் காரணமாக அனைத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
11ஆம் வகுப்பு தேர்வுகளும் இரத்து
மாநில அரசு நிலுவையில் இருந்த 11ஆம் வகுப்பு தேர்வுகளையும் இரத்து செய்தது. 12ஆம் வகுப்பு தேர்விற்கு வராதவர்களுக்கான மறுதேர்வுகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு “மாணவர்களுக்குக்கான மதிப்பெண் 80% காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களில் இருந்தும் மீதம் 20% அவர்களின் வருகை பதிவேட்டில் இருந்தும் கணக்கு செய்ய முடிவு” என அறிவிக்கப்பட்டது.
செவ்வாய் அன்று நடந்த உயர்மட்ட குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கொரோனா நேரத்தில் தேர்வுகள் ஆபத்து
முன்னர், எதிர்கட்சிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா இருக்கும் நேரத்தில் தேர்வுகள் வைக்கப்படுவது மாணவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவித்திருந்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் ஜுன் 11 ஆம் தேதி வரை தேர்வு குறித்து முடிவெடுக்க அரசுக்கு கால அவகாசம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திங்கள் கிழமை தெலுங்கானாவில் அனைத்து 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் இவ்வாறு முடிவெடுக்க நிர்பந்தம் ஏற்பட்டதாக தெரிகிறது.