சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை ஒரு வாரகாலமாக மூடியிருந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை அடுத்து மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சிகப்பு மண்டலங்களில் தொடர்ந்து மூடல்
இருப்பினும் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மதுபானக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வணிகவளாகங்கள் மற்றும் கோவிட்-19 கட்டுபாட்டு மண்டலங்களில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்
மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கினாலும், நாள் ஒன்றுக்கு 500 டோக்கங்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் சமூக விலகல் கடைபிடிக்கப்படாததால் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவு இட்டதை அடுத்து மே 9 ஆம் தேதி முதல் செயல்படாமல் இருந்தது. பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது குறிப்பிடதக்கது.