TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு செய்தவர்களை: போலீசார் அதிரடியாக கைதுசெய்து வருகின்றனர். தோண்ட தோண்ட கிளம்பும் பூதம் கதை போல் உள்ளது.
TNPSC Group 4 முறைகேடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரின் பேரில் 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது டிஎன்பிஎஸ்சி. மேலும், இவர்கள் 99 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
சாமானியனின் கனவும், வாய்ப்பும், அவன் எதிர்காலமும் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவதேயாகும்.
சமீபகாலமாக அதுவும் கனவாகிப்போகிறது. 9-ம் காலிப்பணியிடங்களுக்கு என செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடைபெற்ற தேர்வில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவது சுமார் 5575 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெற்றது.
சமீபத்தில் தேர்வு முடிவு வெளியாகி தரவரிசைப் பட்டியலும் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
தேர்வில் முறைகேடு
நவம்பர் மாதம் வெளியாகிய குரூப் 4-ன் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 35 பேர் இராமநாதபுரம். கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
8 மையங்களில் 39 பேர் முதல் 100 இடத்தில் வெற்றி பெற்றது அதிகாரிகளிடையே சந்தேகத்தை உண்டாக்கியது.
இதையடுத்து டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்ததை தொடர்ந்து தேர்வானவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
99 பேர் தகுதி நீக்கம்
குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டிற்கு தேர்வு அதிகாரிகளும் உடைந்தை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி அமைப்பு, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்தும், அவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதித்துள்ளது.
மேலும் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அழியக்கூடிய மை கொண்ட சிறப்பு பேனா
இது தொடர்பாக சென்னையில் 12 பேரிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ். அதில் ஒருவர் இடைத்தரகர் என்பதும் தெரியவந்துள்ளது.
கைதானவர்களில் ஒருவர் கூறியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. சிலமணி நேரங்களில் அழிந்து விடும் சிறப்பு மை கொண்ட பேனாக்களால் முதலில் தேர்வு எழுதியுள்ளனர்.
அந்த மை அழிந்த பிறகு இடைத்தரகர்களின் உதவியால் மீண்டும் அந்த விடைத்தாள்களில் சரியான விடையை நிரப்பியுள்ளனர். பின்னர் விடைத்தாள் கட்டுகளில் வைத்துத் திருத்தும் இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
தேடுதல் வேட்டை தொடரும்
இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்கும் வரை டிஎன்பிஎஸ்சியும் காவல்துறையும் ஓயாது எனவும், எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து நீங்கள் பரீட்சை எழுதுங்கள் எனவும் இனி இதுபோல முறைகேடு நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி ஆணையம் உறுதியளித்துள்ளது.
தோண்ட தோண்ட கிளம்பும் பூதம் கதை போல் உள்ளது இந்த TNPSC Group 4 தேர்வு விவகாரம்.