வாழ்வே போராட்டம் இதில் வாழ்வாதாரத்திற்காக போராட்டமா? கோவை வால்பாறை பகுதியில் உள்ள மக்கள் வாழ்வதற்காக நடைபயணம் மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் கேட்டு இன்று நடைபயணத்தில் ஈடுபட உள்ளனர்.
வாழ்வாதாரத்திற்கான போராட்டம்
வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டுமனை மற்றும் விவசாய பூமிக்கான பட்டா, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம், அனைத்து கிராமங்களையும் வருவாய் கிராமங்களாக மாற்றுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற உள்ளது.
வருவாய் கிராமமாக மாற்றப்பட்டால் குடிநீர், மின்சாரம், சாலை வசதி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகள் அவர்களால் பெற முடியும்.
போராட்டத்தின் முதல் கட்டம்
போராட்டத்தின் முதல் கட்டமாக இன்று காலை முதல் பொள்ளாச்சி டி.எஃப்.ஓ அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அறவழியில் போராட்டம்
போராட்டம் என்றால் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் அமைதியாக 120 கி.மீ. நடைப்பயணம் மேற்க்கொள்ள போகின்றனர்.
இன்று பேரணி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் போராட்டம் 13-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை அவர் அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுப்பதில் முடிவுக்கு வர உள்ளது.
தடைகளை தவிடு பொடி ஆக்கு
இதையடுத்து வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி தலைமையில் அதிகாரிகள் அவசர அவசரமாக பழங்குடி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து போராட்டத்தை ஒடுக்குவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதாவது போராட்டத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எவ்வளவு தடைகள் வந்தாலும் போராட்டம் தொடரும் என அம்மக்களும் உறுதிபட கூறியுள்ளனர்.