அசுரத்தனமாக தமிழ் கற்கும் சீனர்கள்: அதிரவைக்கும் கேள்விகள்?
பொங்கல் தினத்தன்று, சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்கள் பொங்கல் கொண்டாடிய வீடியோ வெளியானது.
இந்த வீடியோ நம்மை ஆச்சரியப்படுத்தினாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
சீனாவில் தமிழ் பேசுவது புதிதல்ல. தமிழ் மொழியில் வானொலி நிகழ்ச்சிகள் பலவருடங்கள் முன்பு இருந்தே ஒளிபரப்பட்டு வருகிறது. கலைமகள் என்ற சீனப்பெண் தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
ஆனால், தற்பொழுது சீனப் பல்கலைக்கழகம் தமிழ் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பல சீன மாணவர்கள் தமிழ் கற்று வருகின்றனர்.
மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பை தமிழகத்தில் மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது யுன்னான் மின்சு பல்கலைக்கழகம்.
ஏன் சீனர்கள் தமிழ் கற்கின்றனர்?
இந்தியா ஒரு மிகப்பெரிய பொருளாதார சந்தை கொண்ட நாடு. இந்தியப் பணியாளர்களை நம்பி பல வல்லரசு நாடுகள் தொழில் துவங்கியுள்ளது.
சீனாவின் பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல நிறுவனங்கள் உள்ளன.
இங்குள்ள சீன முதலாளிகளுக்கு ஆங்கிலமும், சீன மொழியும் மட்டுமே தெரியும். இதனால் அனைத்து தரப்பு பணியாளர்களிடமும் நேரடியாக அவர்களால் பேசமுடிவதில்லை.
எனவே தமிழ் மொழி கற்ற சீனர்களே நேரடியாக அவர்களுடன் பேசுவதன் மூலம் நிறுவனத்தை மேலும் வளர்ச்சிபெறச் செய்யமுடியும் என்பது ஒரு காரணம்.
சீனாவில் தமிழுக்கென ஒரு துறை உள்ளது. மேலும் சீனாவில் தமிழ் மொழியில் பத்திரிகைகளும் உள்ளன. இதனால் அதில் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவை சீன மொழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியும் தற்பொழுது அதிகரித்துள்ளது. இதிலும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ், தமிழகத்தில் மட்டுமல்ல. உலகில் பல நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இலங்கை. சீனாவின் நட்பு தேசம். அங்கு அவர்கள் தொழில் துவங்க தமிழ் மொழி உதவலாம்.
மேலும் உலகில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்தையும் சீனர்கள் கற்று வருகின்றனர். உலகில் மூளை முடுக்களில் சீனா ஆதிக்கம் செலுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.