இந்தோனேசியாவில் சட்டையில்லாமல் கதிரவன் முன் நிற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கேட்டால், கதிரவனை வணங்குவோம் அதனால் அதிகபடியான கதிரவனின் ஒளி எங்களை கொரோனா தாக்காமல் பாதுகாக்கும் மற்றும் கொரோனாவை அழிக்கும் என தெரிவித்தனர்.
இளைஞர்கள் ஆர்வம்
ராணுவ வீரர்கள் முதல் இளைஞர்கள் வரை இவ்வாறு மேலாடையின்றி வீதியில் உலா வருவதை காணமுடிகிறது. கதிரவனின் ஒளி மனிதனுக்கு அதிக வைட்டமின் -டி சத்தை கொடுத்து கொரோனாவை கொல்லும் ஆற்றல் உடையது என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருவதும் இத்தகைய செயல்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் யுஎஸ் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கதிரவனின் ஒளியானது வைரஸ்ஸை விரைவாக அழிக்க வல்லது என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
மருத்துவர்கள் கூறுகையில் காலையில் 15 நிமிடம் கதிரவனின் ஒளியில் நிற்பது நம் உடலுக்கு நல்லது எனவும், கொரோனாவை கதிரவனின் ஒளி கொல்லும் என்பது சந்தேகம் தான் எனவும் தெரிவித்தனர்.
வைட்டமின் -டி கிடைக்கும்
வைட்டமின் – டி யை மீன், முட்டை, பால் மற்றும் கதிரவனின் ஒளி ஆகியவற்றில் இருந்து பெறலாம் எனவும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ” சூரிய குளியல் கொரோனாவை உடலிருந்து அழிக்காது” என மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி அதிக நேரம் கதிரவனின் ஒளியில் நிற்பது சருமப் பிரச்சனைகளை வரவழைக்க வாய்ப்பு இருப்பதாக இந்தோனேசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதிய காலகட்டத்தில் வெள்ளை நிற தோல் மோகத்தால் சூரிய குளியல் போன்ற பழக்கவழக்கங்கள் மக்களிடையே குறைந்துவிட்டது மேலும் முகத்தில் பூசும் அழகு சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.