யு.கே. பிரதமரின் வருங்கால மனைவிக்கு குழந்தை பிறந்தது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தது சமீபத்தில் தான் பணிக்கு திரும்பினார்.
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவரின் வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் தங்களுக்கு மகன் பிறந்திருப்பதை அறிவித்துள்ளனர் என்று பிரதமரின் செய்தி தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.
பிபிசியின் தகவலின் படி, தாயும் குழந்தையும் நலமுடனும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்ட ஜான்சன், குழந்தை பிறக்கும் வரை மருத்துவமனையிலேயே இருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் பிரசவ நேரத்தில் திறம்பட செயலாற்றி உதவிய என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவிற்கு தங்களின் நன்றியினைத் தெரிவிகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
ஜான்சன், மற்றும் சைமண்ட்ஸ், இருவரும் கடந்த மார்ச் மாதத்தில், தங்களுக்கு இந்த கோடைக்காலத்தில் ஒரு குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
55 வயதான ஜான்சன் கொரோனா வைரஸ் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை (இதில் 3 நாட்கள் தீவிர சிகிச்சையும் அடங்கும்) பெற்று திரும்பிய சில நாட்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கொரோனா வைரசுடனான போராட்டத்திற்குப் பிறகு முழுமையாய் குணமடைந்த ஜான்சன், அண்மையில் பணிக்கு திரும்பினார். ஜான்சனின் நெருங்கிய நண்பர்கள் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.
அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், தொழிலாளர் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரும் ஜான்சன்-கேரி ஆகியோரை வாழ்த்தி உள்ளனர்.
ஸ்காட்லாந்து முதல் மந்திரி ஸ்டர்ஜன் “இது ஒரு இனிய செய்தி. என் மனமார்ந்த வாழ்த்துக்களை கேரி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கிறேன். அவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் வடக்கு அயர்லாந்தின் முதல் மந்திரி அர்லீன் போஸ்டர் வாழ்த்துகையில் “தூக்கமில்லா இரவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை ஜான்சன் தனது முதல் பிரதமரின் கேள்வி நேரத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் அவருக்கு பதில் பங்கேற்றார்.
ஜான்சனுக்கு 2018-ம் ஆண்டில் பிரிந்த அவரது இரண்டாவது மனைவி மெரினா வீலருடன் 4 குழந்தைகள் உட்பட 5 குழந்தைகள் ஏற்கனவே உள்ளதாக கூறப்படுகிறது.