ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை எப்படி உருவானது? ஜெயஹிந்த் என்ற வார்த்தை எப்படி பிரலம் அடைந்தது? அதன் அர்த்தம் என்ன? வந்தே மாதரம் விடுதலைப் போராட்டம்.
வார்த்தை வரலாறு
புதிய வார்த்தைகள் எப்படி உருவாகிறது? யாரால் உருவாக்கப்படுகிறது? என இன்று நம்மிடம் தரவுகள் சேமிக்கும் தொழில்நுட்பம் இருக்கலாம். ஆனால், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆதாரங்கள் திரட்டுவது சுலபமான காரியம் அல்ல.
மன்னர்கள் காலம் தொட்டே எத்தனையோ ஆதாரங்கள், எதிரி நாட்டு அரசர்களால் அழிக்கப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள கோவில் கல்வெட்டு, சிற்பம், ஓவியம், ஓலைச்சுவடி, இலக்கிய பாடல்கள் மூலம் வரலாறுகளை அறிந்து வைத்து இருக்கிறோம்.
அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழ் தான் உலகின் மூத்த மொழி என நாளுக்கு நாள் புதிய புதிய ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது.
இவைகளைத் தவிர, பல செவி வழி சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றிக்கு ஆதாரம் எனக் கேட்டால் கொடுப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. அவை காலம் தொட்டே நாம் செவி வழியாக கேட்ட ஒன்று.
யார் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்? என இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்தக் கேள்வி எழுப்பினால் ஒரே மாதிரி பதில்கள் கிடைக்காது.
ஏன் என்றால்? அவரவர் தங்கள் இனத்தைச் சேர்த்தவர்களை அடையாளப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி ஒருவர் பெயரை கூறுவார்கள்.
இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டி அதை ஆட்சி செய்து, அதற்கு சுதந்திரம் கொடுத்து இன்று வரை நம்மை பேச வைத்துவிட்டு சென்றவர்கள் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயருக்கு முன் எத்தனையோ மன்னர்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் பலபகுதிகளை கையகப்படுத்தி பெரிய சாம்ராஜ்ஜியம் உருவாக்கி உள்ளனர். ஆனால் உருவாக்கிய வேகத்தில் சரிந்தும் விழுந்தனர்.
ஆங்கிலேயர்களால் மட்டுமே ஒரு மிகப்பெரிய நாட்டை ஒற்றுமைப்படுத்தி ஆட்சி செய்து, மக்களாட்சி நாடக மாற்றி இந்தியா என்ற நாட்டை உருவாக்கினர்.
எல்லோரையும் இந்தியர்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதன்பிறகே நமக்கு இந்தியர்கள் என்ற உணர்வும், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது.
அந்த உணர்வை உருவாக்கும் ஒரு மந்திரச்சொல் தான் ஜெய்ஹிந்த். மொழி எதுவாகினும் உணர்வு ஒன்று தான்.
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்றால் “இந்தியா வெல்க” என்று பொருள் படும். “இந்துஸ்தான் கி ஜெய்” என்ற வார்த்தையின் மறுஉருவாக்கம் தான் “ஜெய்ஹிந்த்”.
இந்த வார்த்தையை யார் முதலில் முழங்கியது எனக் கேட்டால் அதற்கும் ஒரு பெரிய வரலாறே உள்ளது.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் கூறியவர்கள் என இருவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் பிள்ளை மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஆபித் ஹசன் சப்ரானி.
செண்பகராமன் பிள்ளை
செண்பகராமன் பிள்ளை இளம் வயது முதலே சுதந்திர போராட்ட வேட்கை கொண்டவர். புரோ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.
சர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மானிய ஒற்றர் மூலம் ஜெர்மனி சென்றவர் அங்கேயே பட்டப்படிப்பை முடித்தார். ஹிட்லர் வழியைப் பின்பற்றி இந்திய விடுதலைக்காக பாடுபட்டார்.
1933-ல் சுபாஸ் சந்திரபோஸ் வியன்னாவில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொண்டபோது, சுபாசிடம் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை செண்பகராமன் தெரிவித்ததாக இரண்டு புத்தகங்களின் தரவு கூறுகிறது.
Madras Presidency in Pre-Gandhian Era என்ற புத்தகத்தை எழுதிய சரோஜா சுந்தராஜன், புத்தகத்தில் வியன்னா மாநாடு பற்றி எழுதியுள்ளார்.
Germany’s Asia-Pacific Empire என்ற புத்தகத்தை எழுதிய சார்லஸ் ஸ்டீபன்சன், அந்த புத்தகத்தில் ஜெய்ஹிந்த் பற்றியும் செண்பகராமன் பிள்ளை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆபித் ஹசன் சப்ரானி
ஆபித் ஹசன் ஜெர்மனி சென்று பொறியியல் பட்டம் பெற்றவர். சந்திரபோஸ் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப்போரில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார்.
இந்திய தேசிய ராணுவத்திற்கும், சுபாஸ் சந்திரபோஸுக்கும் மொழிப் பெயர்ப்பாளராக செயலாற்றினார். ஆபித் ஹசன் தான் “ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தையை சுபாசிற்கு பரிந்துரை செய்தார் என்றும் கூறப்படுகிறது.
தாகூர் யஸ்வந் சிங் அவர்கள் கூறிய ஹிந்துஸ்தான் ஹி ஜெய் என்ற வார்த்தையைத் தழுவி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆபித் ஹசன் உருவாக்கியதாக குர்பச்சன் சிங் மன்கட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
ஜெய்ஹிந்த் பிரபலம் ஆனது எப்படி?
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை யார் முதலில் கூறினார் என்பதைவிட அதை பிரபலப்படுத்தியது சுபாஸ் சந்திரபோஸ்.
இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற காரணமான இந்திய தேசிய இராணுவத்தில், சுபாஷ் தன்னுடைய உரையை முடிக்கும் போது ஜெய்ஹிந்த் எனக் கூறி முடிப்பார்.
அதன்பிறகு, இந்தியா விடுதலை பெற்றதும் முதலில் கொடியேற்றிய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜெய்ஹிந்த் எனக்கூறி உரையாற்றினார்.
ஆகஸ்டு 15, 1947 முதல் அனைத்து அஞ்சல்களில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
அனைத்து அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளும், ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்லுடன் முடிவு பெரும்.
1947-ல் நடந்த பிரித்தானிய அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு, மகாத்மா காந்தி தன் கையால், “ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்” சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.
இன்று வரை, ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் தேசபற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக முழங்குகின்றனர்.