ஷன் மதங்கள்: இந்து மதம் உட்பிரிவு சமயங்கள்! காணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் இந்த ஆறு சமயம் இணைந்ததே இந்து மதம்.
ஆன்மீக பூமி என்று கூறப்படும் நமது இந்திய நாட்டில் எண்ணிடலங்கா வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.
வேத காலங்களுக்கு முன்பே இந்தியாவில் பல சமயங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றன.
அதன் பின் இந்து சனாதன தர்மத்தில் இன்றளவும் ஆறு வகை சமயங்கள் (ஷன் மதங்கள்) பின்பற்றப்பட்டு வருகின்றன.
இருப்பினும் நாம் நமக்கு பிடித்தமான இறைவனை பிடித்தமான பெயர்களில் பிடித்தமான வகையில் பூசைகள், விழாக்கள் முதலானவற்றை கொண்டாடிக் கொண்டு தான் வருகிறோம்.
பெரும்பாலும் நாம் அறிந்தவை சைவம், வைணவம் மட்டுமே அவை மட்டுமின்றி பிற சமயங்களும் உள்ளன. அவற்றைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
ஆறு வகை சமயங்கள்:
• காணாபத்யம்
• கௌமாரம்
• சைவம்
• வைணவம்
• சாக்தம்
• சௌரம்
காணாபத்யம் சமயம்
மூல முதற் பொருளான கணாதிபன் என்று சொல்லப்படுகின்ற கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறையே காணாபத்யம் ஆகும்.
இதில் விநாயகப் பெருமானை துதித்து அவருக்கு உகந்த பூசனைகள், வேள்விகள் நடத்தி வழிப்படுவர்.
முற்காலத்தில் ஔவையார், நம்பியாண்டார் நம்பிகள் போன்றோர் காணாபத்யத்தை பின்பற்றி விநாயகர் திருவருளாளே ஞானத்தை பெற்று நற்கதி அடைந்ததாக கூறப்படுகிறது.
விநாயகர் இல்லாத இடங்களே இல்லை என சொல்லாம் இந்தியா மட்டுமின்றி உலகில் பல இடங்களில் கணபதிக்கு கோவில்கள் உள்ளன.
இவருக்கும் ஆறு படை வீடுகள் உள்ளன. இருப்பினும் பிள்ளையார் பட்டி மிகவும் பிரசித்தமானதாகும்.
விநாயகர் அகவல், விநாயகர் வெண்பா, கணேச புராணம் போன்ற நூல்கள் காணாபத்தியத்தில் முக்கியமான நூல்கள் ஆகும்.
விநாயக சதுர்த்தி விழா காணாபத்யத்தில் மிக முக்கியமான விழாவாகும்.
கௌமாரம் சமயம்
குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறும் அளவிற்கு தமிழகத்தில் குன்றுகள், மலைகளில் எல்லாம் முருகனிற்கு கோவில்கள் உள்ளன.
அப்படிப்பட்ட முருகப் பெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறையே கௌமாரம் ஆகும். .
கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், கிருபானந்தவாரியார் முதலானோர் கௌமாரத்தில் குமரக் கடவுளால் ஞானம் பெற்றோர் ஆவர்.
ஆறுபடை வீடுகள் மற்றும் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் ஆலயங்கள் குமரக் கடவுளுக்காக உள்ளன.
கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தர் கலி வெண்பா, கந்தகுரு கவசம், பஞ்சாமிர்த வர்ணனை, முத்துகுமார சுவாமி பிள்ளைத்தமிழ், ஸ்கந்த புராணம் போன்ற நூல்கள் கௌமாரத்தில் முக்கியமான நூல்களாகும்.
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, தை பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள், சஷ்டி விரதங்கள் கௌமாரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சைவம் சமயம்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவரான அன்பே வடிவான சிவ பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறையே சைவம் ஆகும்.
சிவத்தை அடையும் பேரினை பெருவதே சைவத்தின் கொள்கையாகும்.
இறைதன்மையை எவரும் அடையலாம் என்பதே சைவர்களின் நிலைப்பாடாகும்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள், 18 சித்தர்கள், 7 ரிஷிகள், இராமலிங்க வள்ளலார் முதல் பல சித்த புருஷர்கள் சைவ சமயத்தில் இறைநிலை அடைந்தோர் ஆவர்.
இமயம் முதல் குமரி வரை ஆயிரத்திற்கும் மேல் சிவ பெருமானிற்கு கோவில்கள் உள்ளன. பஞ்ச பூத ஸ்தலங்கள், ஜோதிர் லிங்க ஸ்தலங்கள், அட்டவீரட்ட ஸ்தலங்கள் என பல கோவில்கள் முக்கியமான சைவ ஸ்தலங்கள் ஆகும்.
எண்ணிலடங்கா சைவ சிந்தாந்த நூல்கள் உள்ளன. சிவ ஆகமங்கள், தேவாரம், திருவாசகம், சிவபுராணம், திருவெம்பாவை மிக முக்கியமான சைவ நூல்கள் ஆகும்.
ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை, திருகார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வைணவம் சமயம்
ஆதி மூலமே என்று யானை அழைத்த உடன் ஓடி வந்த பரந்தாமனை முழு முதற்கடவுளாக கொண்டு வழிபடும் முறையே வைணவம் ஆகும்.
வைகுண்ட பதவி அடையும் வழிமுறைகளை வகுத்தளித்து அதனைப் பின்பற்றுகின்றனர்.
பன்னிரண்டு ஆழ்வார்கள், இராமானுசர், இராகவேந்திரர், கபீர் தாசர், துளசி தாசர், அன்னமய்யா போன்றோர் ஸ்ரீ வைஷ்ணவத்தில் குறிப்பிடத்தக்க அடியார்கள் ஆவர்.
நூற்றி எட்டு திவ்ய தேசங்கள் முதல் பல வைணவ திருத்தலங்கள் உள்ளன.
திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம், வாரணமாயிரம், அன்னமய்யா கீர்த்தனைகள், இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை வைணவத்தில் முக்கியமான நூல்கள் ஆகும்.
திருவோணம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, இராம நவமி போன்றவை முக்கியமான வைணவ விழாக்கள் ஆகும்.
சாக்தம் சமயம்
அருளே வடிவான அம்பிகையின் வடிவங்களை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் முறையே சாக்தம் ஆகும்.
அத்வைத மோட்சத்தை அடையக்கூடிய நிலைகளைப் பின்பற்றி அம்பிகையின் பதம் அடைவதே இதன் கொள்கையாகும்.
காளிதாசர், அபிராமி பட்டர், ஆதி சங்கரர், இராமகிருஷ்ணர் போன்றவர்கள் சாக்த அடியார்கள் ஆசக்திகளை சக்தி பீடங்கள் முதல் பல்வேறு சக்தி் ஸ்தலங்கள் இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் உள்ளன.
அம்பிகை புகழ்பாடும் நூல்கள் பல. அதில் அபிராமி அந்தாதி, சரசுவதி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளை தமிழ், லலிதா சகஸ்ரநாமம், தேவி மாகாத்மியம், தேவி பாகவதம் மற்றும் பல தாந்திரீக நூல்கள் உள்ளன.
நவராத்ரி விழாக்கள், விஜய தசமி, துர்காஷ்டமி, வசந்த பஞ்சமி, ஆடி பூரம் போன்றவை மிக முக்கியமாக சாக்த விழாக்கள் ஆகும்.
சௌரம் சமயம்
மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வரும் வழிபாடு சூரிய வழிபாடு ஆகும். சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவதே சௌரம் ஆகும்.
இயற்கையையாகப் புலப்படும் இறை சக்திகளை வழிபடும் வழிமுறைகளை வகுத்து பின்பற்றுகின்றனர்.
சூரிய குலத்தில் இராமன் பிறந்தார் மற்றும் கர்ணன் சூரிய அம்சமாகப் பிறந்தார். சூரியனைப் பூஜித்து பல சக்திகளைப்பெற்ற கதைகள் புராணங்களில் உள்ளன.
குஜராத் மோதேரா, ஒடிசா கொனார்க், கும்பகோணம் சூரியனார் கோவில் போன்றவை சௌரத்தில் முக்கியமான ஸ்தலங்கள் ஆகும்.
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், ஆதித்ய சூக்தம், சூரிய புராணம் முதலான நூல்கள் சௌரத்தில் முக்கியமான நூல்கள் ஆகும். மகர சங்கராந்தி, ரத சப்தமி ஆகியவை முக்கியமான சௌர விழாக்கள் ஆகும்.
ஷன் மதங்கள்: இந்து மதம் உட்பிரிவு சமயங்கள் இலக்கு
வழிகள் பலவாயினும் இறுதியில் சென்று சேரும் இடம் ஒன்றே ஆகும். இந்த அனைத்து சமயங்களுமே சொல்லும் ஒரே இலக்கு வீடுபேறு அடைதலே ஆகும்.
இந்து மதத்தில் அவரவர் விருப்பதிற்கு ஏற்ப இறைவனை வணங்கலாம் தடையே இல்லை.
ஆனால் இறை பக்தியில் போட்டியும், பொறாமை குணமும், சண்டையும் கூடாது. அது பக்தியும் ஆகாது.
அனைவரிடமும் அன்பு செலுத்தி இறைவனிடத்தே பக்தி செலுத்தி தொண்டுகள் பல செய்து நற்பேரினை பெறுவோம்.