Home சிறப்பு கட்டுரை பொங்கல் என்றால் என்ன? தைப்பொங்கல் வரலாறு

பொங்கல் என்றால் என்ன? தைப்பொங்கல் வரலாறு

0
1739
பொங்கல் மாட்டுப்பொங்கல் தைப்பொங்கல் வரலாறு தமிழர் பண்டிகை

பொங்கல் என்றால் என்ன? பொங்கல் பெயர் வந்தது எப்படி? தைப்பொங்கல் வரலாறு. மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் இது தமிழர் பண்டிகை.

உழவர்களும், உளவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள். கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.

தைப்பொங்கல் வரலாறு

பழங்காலத்தின் நெற்பயிர் விதைத்து அறுவடை செய்ய குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். ஒரு வருடத்தில், ஒரு வயல் 6 மாதங்கள், நெல் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆடியில் விதைத்த பயிர் நன்கு விளைச்சலை அடைந்து அறுவடை செய்யத் தயாராகும்  மாதமே தை.

தமிழரின் நீண்ட நெடுங்காலப் பயிர் இந்த நெல். நெல்லுச்சோறு என்பது அந்தக் காலத்தில் அடிக்கடி சமைக்கமாட்டார்கள்.

விசேச நாட்களில் மட்டுமே நெல்லுச்சோறு சமைப்பது வழக்கம். தினமும் நெல்லுச்சோறு உண்டால் அவர் அந்த ஊரின் செல்வந்தர் என்பர்.

எனவே, தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உருவானது. காளைகளுக்கு வைக்கோல் கிடைக்கும். விவசாயிக்கு நெல் மணிகள் கிடைக்கும்.

விற்பனைக்கும் பயன்படுத்தப்படும், உணவுக்கும் பயன்படுத்தப்படும். மன்னர்களுக்கு வரி செலுத்தவும் முடியும்.

தமிழக மன்னர்கள் விவசாயிகளிடம் நெல்களை மட்டுமே வரிகளாக அந்தக் காலத்தில் வசூலித்துள்ளனர்.

தஞ்சாவூர் நெற்களஞ்சியம் மிகவும் பிரபலம். நன்கு விளைச்சல் பெற்றால் தான் வரி செலுத்தியதுபோக மீதத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.

வரி வசூலிக்கப்பட்ட நெல்கள், அரண்மனை நிர்வாக உணவிற்கு செலவிடப்படும். பஞ்சம் வந்தால் மக்களுக்கே கூடத் திருப்பி வழங்கப்படும்.

பொங்கல் என்றால் என்ன? பெயர் வந்தது எப்படி?

புதிய அடுப்பு, புதிய பானை மற்றும் புதிய விறகுகள் மட்டுமே பொங்கல் சமைக்க பயன்படுத்துவது வழக்கம்.

இன்றும் சில ஊர்களில், பொங்கலுக்குச் சில நாட்களுக்குமுன் பனை ஓலையை வெட்டி காயவைத்து அதை மட்டுமே எரித்து சமைப்பார்கள். அதே போன்றே அடுப்பும். செங்கல் அடுக்கி, சேறு பூசி,  சாணி மொளுகி தயார் செய்வார்கள்.

பழங்காலத்தில் பொங்கல் வைக்க மண் பானைகள் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது அதிகம் வெண்கலப் பானை, சில்வர் பானைகள் பயன்படுதப்படுகின்றன.

முதலில் அறுவடை செய்த அரிசியை குத்தி பச்சரிசியாக்குவர். பின்பு புதிய பானையில் அரிசி, வெல்லம், பால், நெய் சேர்த்து சமைப்பர்.

பொங்கல் வெண்நுரை தள்ளிப் பொங்கி வழிவதே பொங்கல் எனப் பெயர் பெற்றது. பொங்கலுடன் அந்த வருடத்தில் என்னென்ன அறுவடை செய்தனரோ அதையும் வைத்து சூரிய வழிபாடு அல்லது இறைவழிபாடு செய்வார்கள்.

பிற்காலத்தில் கரும்பு மட்டுமே பிரதான இடம் பிடித்தது. கரும்பை மட்டும் சேர்த்து வழிபாடு செய்யத் துவங்கினர்.

மாட்டுப்பொங்கல் தமிழர் பண்டிகை

மாட்டுப்பொங்கல்

பொங்கல் மறுதினம் காளை மாடு, பசு மாடுகளை சிறப்பிக்கும் விதமாக, அவற்றை வணங்கி நன்றி தெரிவித்து மாட்டுப்பொங்கல் வைப்பார்கள்.

இந்தப் பொங்கலில் வெறும் பச்சரிசி சோறு மட்டுமே சமைப்பார்கள். அதில் இனிப்பு நெய் எதுவும் சேர்க்காமல் வெறும் பொங்கலாக வைப்பார்கள்.

இதற்கு பெயரே வெத்துப்பொங்கல் அல்லது வெறும் பொங்கல். அதை மாட்டிற்கு ஊட்டிய பின்பு தானும் உண்டு மகிழ்வர்.

காணும் பொங்கல்

இது பிற்காலத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. இந்த நாளில் உறவினர்களை காண்பது. இயற்கை காட்சிகளை ரசிப்பது வழக்கமாக்கி கொண்டனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலேயே இது அதிகம் கொண்டப்படுகிறது. மெரினாவில் திரளான மக்கள்கூடி கடல் அழகை ரசித்து காணும் பொங்கலுடன் பொங்கலை நிறைவு செய்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here