ஆடி மாதம்: நாளை பிறக்கிறது ஆடி மாதம். MrPuyal இணையம் வழியாக தினம் ஒரு திருத்தலம் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொள்வோம். அம்மன் அருள் பெறுவோம்!
உத்தராயண புண்ணிய காலம் முடிந்து தட்சிணாயன புண்ணிய காலம் துவங்கும் நாளே ஆடி மாதம் முதல் நாள் ஆகும்.
அதாவது சூரியன் தனது வடதிசை பயணத்தை முடித்து தென்திசை நோக்கி தனது ரதத்தை செலுத்துகின்ற காலமே தட்சிணாயனம் எனப்படுகிறது.
தேவர்களுக்கு பகல் பொழுது முடிந்து இரவு பொழுது துவங்கும் காலம் இதுவே ஆகும்.
ஆடி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது ஆடி ஒன்று முதல் பதினெட்டு வரை நடந்த மகாபாரத போர் ஆகும்.
இந்த ஆடி மாதம் தெய்வ காரியங்களுக்காகவே செலவிடுவதற்கு உரியது. எனவே தான் இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகள் தவிர்த்து ஆண்டவனை நினைந்து பூசிக்க வேண்டியது அவசியம்.
காவிரி, தாமிரபரணி, வைகை என அனைத்து புண்ணிய நதிகளும் பொங்கி ஓடி வந்து விவசாயத்தை செழிக்க செய்கின்றன.
“ஆடி பட்டம் தேடி விதை” என்பர். விவசாயம் துவங்கும் மாதம் இதுவே. எனவே தமிழர்கள் மரபில் ஆடி மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது.
ஆடியில் மாதத்தில் எண்ணற்ற முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஆடியில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமாகும்.
ஆண்டாள் அவதரித்ததும் இந்த ஆடி மாதம் பூரம் தினத்தில் தான்.
ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமான விரத தினமாக முருக பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை பித்ரு தர்பணம் செய்து பித்ரு தோஷங்கள் நீங்க உகந்த நாளாகும். குல தெய்வ வழிபாடிற்கும் உகந்த நாள். தபசு விழா சங்கரன் கோவிலில் நடைபெறும் மாதம் இதுவே ஆகும்.
ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. எனவே வைணவத்திலும் ஆடி முக்கியமான மாதமாகும்.
“காளராத்ரி”க்கு உரிய மாதம் இந்த ஆஷாட மாதமான ஆடி மாதமே ஆகும். இப்படி பல்வேறு விசேடங்கள் நிறைந்தது ஆடி மாதம் ஆகும்.
இருப்பினும் இந்த மாதத்தில் தான் அன்னை ஆதி சக்தியின் வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். சிவத்தை விட சக்திக்கான சானித்யம் நிறைந்து இருக்கும் காலம்.
எனவே ஆடி முழுதும் அன்னைக்கு உகந்த மாதமாகும். ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி என்று அனைத்தும் விரதமிருந்து அன்னையை பூசிக்க வேண்டிய நாட்கள் ஆகும்.
கிராம தேவதைகள் முதல் அனைத்து அம்பிகைகளுக்கும் திருவிழாக்கள் இம்மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.
இப்படி ஆடி மாதத்தின் பெருமையை கூறிக்கொண்டே போகலாம். நாளை சூலை 16 ஆம் நாள் ஆடி முதல் நாள் ஆகும்.
ஆடி முழுதும் அம்பிகையின் பெருமைகளையும். அன்னையின் திருக்கோவில் தரிசனத்தையும். நமது MrPuyal.com இணையத்தில் நினந்தோரும் கண்டு அன்னையினை நினைந்து அருள் பெறப்போகிறோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!!!