அருள்தரும் நவராத்திரி முதல் நாள்: அம்பிகைக்கு வியர்வை முத்துகள் கொட்டும் ஆலயம். கிழக்கு நோக்கிய ஒரே துர்கை அம்மன் ஆலயம். கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்.
பிரபஞ்சத்தின் ஒப்பற்ற சக்தியாக விளங்கும் பெண்மையின் பேராற்றலை பரை சாற்றும் விழாக்களில் அதி அற்புதமான விழாவே நவராத்திரி விழாவாகும்.
மகிடம் போல சுற்றி திரியும் மனித மனதை கட்டுபடுத்தி காம, க்ரோத, லோப, மத, மாச்சரியங்களை அழித்து இறை நிலையை அடைய வேண்டிய தாத்பரியத்தை உணர்த்துவதே நவராத்ரி நாட்கள் ஆகும். மகிட மனதை அழிப்பதால் தான் இவளை
“மாதர்மே மதுகைடபக்னி மஹிஷ ப்ராணா பஹரோத்யமே ஹேலா நிர்மித தூம்ரலோசன வதே ஹே சண்ட முண்டார்த்தினி நி : சேஷிக்ருத ரக்த பீஜ தனுஜே நித்யே நிசும்பாஹே சும்ப த்வம்ஸினி ஸம்ஹாராக துரிதம் துர்க்கே நமஸ் தேம்பிகே” என தியானிக்கின்றோம்.
இந்த நாட்களில் அனைவரும் ஒரு மனதாக அம்பிகையை பிராத்தனை செய்தும், கொலு வைத்தும், தான, தர்மங்கள் செய்தும் நவராத்திரி விழாவினை கொண்டாடுவது வழக்கம்.
மகிடன், சும்ப, நிசும்ப, இரத்தபீஜ, சண்ட, முண்டர்களை சம்கரித்த அம்பிகை சாந்தம் கொண்டு தவத்தில் வந்தமர்ந்த திருத்தலமே கதிராமங்கலம் வன துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
கிழக்கு நோக்கிய துர்கை திருக்கோயில்
துஷ்டர்களை அழிக்கும் மகா சக்தியே துர்கா பரமேஸ்வரி ஆவாள். சைவ, வைணவம் என்ற பாகுபாடின்றி அனைத்து கோவில்களிலும் குடி கொண்டிருப்பவள் துர்கை ஆவாள்.
அப்படிப்பட்ட அம்பிகை வன துர்கா பரமேஸ்வரி என்ற திருநாமத்துடன் இருக்கும் தனித் திருத்தலமே கதிராமங்கலம் ஆகும்.
முற்காலத்தில் இங்கே அம்பிகை கோவில் ஏதும் இன்றி வன்னி மரக்காட்டிலே காற்று, மழை, வெய்யில் என அனைத்தையும் தாங்கி கொண்டு வெட்ட வெளியில் இருந்தால்.
பின் அம்பிகைக்கு கோவில் அமைக்கப்பட்ட போதும் காற்று மழை வெயில் அம்பிகை மீது படுமாறு துவாரம் இன்றளவும் அம்பிகையின் கூரையில் உள்ளதால் ஆகாச துர்கை எனவும் அழைக்கப்படுகிறாள்.
மற்ற கோவில்களில் வடக்கு அல்லது மேற்கு நோக்கி துர்கை சன்னதி அமைந்து இருக்கும். ஆனால் இங்கே கிழக்கு நோக்கி உள்ளது சிறப்பு மிக்க ஒன்றாகும்.
மேலும் விநாயகர் இங்கே அம்பாளுக்குள் அடக்கம் என்பதால் விநாயகர் சன்னதி கிடையாது. இராகுவின் அதிதேவதை இவளே என்பதால் பின்புறத்தில் சர்ப்பமாகவே ஆம்பாள் காட்சி தருகிறாள். பாதமானது மகிடன் இல்லாமல் தாமரையில் பதித்து மகாலட்சுமியின் அம்சமாக காட்சி தருகிறாள்.
அபயம் காட்டி கருணை பொங்கும் முகத்தோடு உள்ளாள். இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பிகையில் உள்ளங்கையில் இருந்து வியர்வை முத்துக்கள் சிந்துவது அதிசயமான ஒன்றாகும்.
அகத்தியர், மிருகண்டு முனிவர் மற்றும் கம்பர் முதலானோர் இந்த அம்பிகையை பூசித்து அவளின் அருளினால் பல சக்திகளை பெற்றனர் என்கிறது தல வரலாறு.
வளமான வாழ்வு தருவாள் வனதுர்கா!
இராகு காலத்தில் இவளை வழிபடுவதால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி திருமணம், குழந்தைப் பேறு என அனைத்தும் கிடைக்கும்.
இராகு தோஷம் உள்ளவர்கள் ஒருமுறை சென்று அம்பிகையை தரிசிக்க தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவர். குல தெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் இவளை சென்று வணங்கினால் குலத்தெய்வத்தை காட்டி கொடுப்பாள்.
அனைவரும் இந்த நவராத்திரி காலத்தில் கதிராமங்கலம் சென்று அன்னையை தரிசித்து நற்பேறு பெறுவோம்.
அமைவிடம்: மாயவரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்.