ஆடி மாத தரிசனம் 11: நினைத்ததை நடத்தி வைப்பாள் ஆயிரத்தம்மன். துப்பாக்கியால் சேதமான ஆயிரத்தம்மன் விக்ரகம். நோயை விரட்டிய பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.
அண்ட சராசரங்களை ஆட்சி புரியும் அம்பிகை ஆதிசக்தி தமது மக்கள் கொடிய பிரச்சினைகளால் துன்புறுவதை கண்டு பல்வேறு அற்புதங்களை செய்து காத்து வருகிறாள்.
அவள் அனைவரையும் கவனித்து கொள்ளும் ஆயிரம் கண்ணுடையாள். இவளை சமஸ்கிருத நூல்கள் சகஸ்ராக்க்ஷி என்று கூறுகின்றன.
அந்த ஆயிரம் கண்ணுடைய நாயகி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடுநாயகமாக கோவில் கொண்ட திருத்தலமே ஆயிரத்தம்மன் திருக்கோவில் ஆகும்.
ஆயிரத்தம்மன் வரலாறு
முன்னொரு காலத்தில் இந்த அம்மன் தற்பொழுது உள்ள சமாதனாபுரத்தில் அப்பொழுதிய போர்ப்படை வீரர்கள் பகுதியில் சிறு குடிசையில் வைத்து பூஜித்து வரப்பட்டாள்.
ஒரு முறை இப்பகுதி முழுதும் கொடிய நோய் ஒன்று பரவி வந்தது. மக்கள் அனைவரும் தங்களை நோயிலிருந்து காக்க வேண்டி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந்த பூசையில் இப்பகுதி பட்டாளத்து வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கலிட்டு வேண்டினர்.
அப்பகுதியை ஆண்ட அஹ்னிதுரை என்ற நவாப் அன்றைய தினம் வீரர்களின் அணிவகுபிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவர்கள் பூசைக்கு சென்றதால் அணிவகுப்பிற்கு போக இயலவில்லை.
இதனால் கோபம் கொண்ட நவாப் வீரர்களை அழைத்து, வராமல் போனதற்கான காரணம் கேட்டார். வீரர்களும் பூசைக்கு சென்ற விவரத்தை கூறினர்.
இதனால் வெகுண்ட கோபத்துடன். அம்மன் விக்ரகத்தை துப்பாக்கியால் சுட்டு சேதமாக்க உத்தரவிட்டார். அதன் படி சுட்டதால் அம்மனுக்கு கைகள், கால்கள், இடுப்பு பகுதி சேதமடைந்தது.
அன்று இரவே துரையின் குடும்பதிற்கு கொடிய நோய் தொற்று தாக்கி அவதிப்படுத்தியது. தம் தவறை உணர்ந்து நவாப் அம்மனிடம் மன்னிப்பு கேட்க தாய் மனமிறங்கி நோய் நீக்கினால்.
சில காலத்தில் இங்கே அம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. பின்னமான சிலை வைக்க கூடாது என்பதால் புதிய சிலை செய்ய ஏற்பாடுகள் நடந்தது.
ஆனால் அம்மன் அருள்வாக்கு கூறி தான் இப்படியே இருக்க விரும்புவதாக கூறினாள். எனவே புதிதாக செய்யப்பட்ட அம்மன் சிலை பாளையங்கோட்டை சிவன் கோவில் கன்னி மூலையில் பிரதிட்டை செய்யப்பட்டு. பழைய சிலை ஆயிரத்தம்மன் கோவிலில் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.
நினைத்ததை நிறைவேற்றுவாள் ஆயிரத்தம்மன்!
பாளையங்கோட்டையை சுற்றி உள்ள அம்மன்களில் ஆயிரத்தம்மனே மூத்தவள் ஆவாள்.
இவளுக்கு தசரா விழா மிகவும் விசேடமானது. மைசூர், குலசை அடுத்து பாளையங்கோட்டை தசரா தான் மிக பிரபலம். ஒரே நாளில் 12 அம்மன்கள் சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா காண்பர்.
ஆயிரத்தம்மனை தரிசித்தால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நிதர்சமான உண்மை.
தன் பக்தர்களுக்கு தேவையறிந்து வரமளிக்கும் வள்ளலாய் அருளாட்சி நடத்தி வருகிறாள் ஆயிரத்தம்மன்.
அனைவரும் பாளையங்கோட்டை சென்று ஆயிரத்தம்மனை தரிசித்து பிணியின்றி வாழ்வோம்.
அமைவிடம்: ஆயிரத்தம்மன் கோவில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
ஆடி மாத தரிசனம் தொடரும்..