Maatram Foundation: கல்வியால் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் ‘மாற்றம் அறக்கட்டளை‘
‘உதவ இருக்கும் கரங்களிடம்இயலாமையில் தவிக்கும்கரங்களை ஒப்படைக்க உதவுவோம்’
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து ” -திருவள்ளுவர்.
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, அதன் பின் வரும் ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்பது இத்திருக்குறளின் பொருள்.
கல்விதான் ஒரு சமூக வளர்ச்சியின் ஆதி. கல்விதான் பெறும்பாலானோர்க்கு தன் அறிவுச்செறிவை வளர்க்க உதவும். அதன் மூலம் அவனுக்கு கிட்டும் பலன்கள் பல. கல்வியென்பது அவசியத்தோடான அடிப்படை.
கல்விதான் சமூக வளர்ச்சி:
கல்வி ஒரு தனிமனிதன் வழியாக ஒரு குடும்பத்தை ஒரு சமூகத்தையே முன்னேற்றும் ஆற்றலுடையது. அதற்கான சான்றுகளை நாம் பல கண்டிருக்கிறோம். ஒரு தனிமனிதன் கல்விக்கே இவ்வளவு மதிப்பென்றால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கல்வி கிடைத்தால் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழும். அதனால் நிகழும் மற்ற பலன்களை விடுங்கள். அந்த ஒரு தனிமனிதரின் குடும்பத்தில் விளையும் மகிழ்ச்சி அவ்வளவு நிறைவான ஒரு அறம்.
மாற்றம்:
அனைவருக்கும் கல்வி என்பதை அரசு கூறிவந்தாலும் அதை செயல்முறைப்படுத்தியிருந்தாலுமே இன்னு பலமுனைகளில் பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருப்பதை நாம் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.
இந்த கல்வி எனும் கனியை பறித்து தேவையானவர்களுக்கு கொடுக்க சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முயன்றுவருகின்றன. அப்படியான ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம்தான், மாற்றம் அறக்கட்டளை.
கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை கல்வியின் மூலம் மாற்றியுள்ளது, மாற்றம் அறக்கட்டளை.
ஏழை மாணவர்களுக்கு பல்வேறு முறையில் உதவி செய்தல், நூலகங்களை பள்ளிகளில் ஆரம்பித்தல், சமூகத்தில் நிகழும் பேரிடர்களுக்காக தங்களால் முடிந்த உதவியை செய்தல் என பல நன்-நிகழ்வுகளுக்கு இந்த அறக்கட்டளை காரணமாகியுள்ளது. குறிப்பாக மாணவர்களின் உயர்கல்விக்காக மாற்றம் அறக்கட்டளையை சார்ந்த நபர்கள் செய்யும் பங்கு அளப்பரியது.
அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை வியக்கவைக்க கூடியதாகவே இருக்கிறது. பேச்சாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் HR – ஆக பணிபுரியும் சுஜித்குமார் அவர்களின் முயற்சியில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை. இப்போது சில நபர்கள் அடங்கிய ஒரு குழுவின் முயற்சியால் மாற்றம் அறக்கட்டளை பன்முனைகளில் விரிவடைந்து பலருக்கும் தொடர்ந்து ஆதரவுக்கரங்களை நீட்டிவருகின்றனர்.
உதவுவோம்:
இப்போது இந்த பதிவிற்கான காரணம் யாதெனில், பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தாயிற்று. இனி மாணவர்கள் அவர்களின் உயர்கல்வியை பற்றி சிந்திக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் தங்களது பொருளாதரத்தால் குடும்ப சூழ்நிலைகளால் உயர்கல்வியை பற்றி சிந்திக்க கூட முடியாத நிலையிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். உயர்கல்வி படிக்க ஆசையிருந்தும், நல்ல மதிபெண்கள் இருந்தும், சூழ்நிலைக்காரணமாக உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்களை மாற்றம் அறக்கட்டளை அரவணைத்துக்கொள்கிறது.
இந்த கல்வியாண்டில் நிகழவிருக்கும் சேர்க்கைகளுக்கான விண்ணப்பங்கள் மாற்றம் அறக்கட்டளையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
‘உதவ இருக்கும் கரங்களிடம் இயலாமையில் தவிக்கும் கரங்களை ஒப்படைக்க உதவுவோம்’ என்பதே இப்பதிவின் ஆதிநாதம். நம்மில் ஒருவருக்கோ, நமக்கு தெரிந்த ஒருவருக்கோ இந்த தகவல் அவர்களின் வாழ்நிலையை மாற்றக்கூடியதாக இருக்கலாம்.
அப்படி அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய மாற்றம் அறக்கட்டளை மற்றும் சேர்க்கை விண்ணபத்திற்கான இணையதள முகவரி https://www.maatramfoundation.com
பலரும் தன்னலச்சகதியில் சிக்கிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், ‘வாழ்வென்பது வாழ்தல் மட்டுமல்ல வாழ்விப்பதும் கூட’ என்ற பொன்மொழியை செயலில் காட்டிவரும் ‘மாற்றம் அறக்கட்டளைக்கும்’ அதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் அத்தனை நல்உள்ளங்களுக்கும் பாராட்டுக்களோடு அன்பும்! நன்றியும்!