64 சித்தர்கள் ஜீவ சமாதி: ஒரே இடத்தில் அமைந்த 64 சித்தர்கள் ஜீவ சமாதி, அதிசயமான சித்தர் காடு ரகசியம், சிற்றம்பல நாடிகள் வரலாறு சித்த ரகசியம், கண்ணப்பர் பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
நமது தமிழ் திருநாட்டில் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், பிணிகளை போக்கவும் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி மக்களை காத்து வருகின்றனர்.
இன்றளவும் தங்கள் ஜீவனை சிவனாக்கி சூட்சும வடிவில் அருள்புரிகின்றனர். இப்படி சித்திர்கள் இறையுடன் கலந்த இடமே ஜீவ சமாதிகள் ஆகும். ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம் என்றாலே மிகுந்த சக்தி மற்றும் உயிர் ஆற்றல் மிக்க இடமாக இருக்கும்.
ஆனால் நம் தமிழகத்தில் ஒரே இடத்தில் 64 சித்தர்களின் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் ஒன்று உண்டு. அதுவே சித்தர் காடு ஆகும்.
64 சித்தர்கள் ஜீவ சமாதி
மயிலாடுதுறையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இடமே சித்தர் காடு. இங்கே ஒரு சித்தர் தம்முடைய 63 சீடர்களுடன் சமாதி அடைந்துள்ளார். இதனாலேயே இப்பகுதி சித்தர் காடு எனப்படுகிறது.
சிற்றம்பல நாடிகள் வரலாறு
சிற்றம்பல நாடிகள் என்ற சித்தர் பதினான்காம் நூற்றாண்டில் சைவ வேளாளர் குடியில் சீர்காழியில் அவதரித்தவர். சிதம்பரம் சிற்றபலநாதனின் பரம பக்தரான இவர் சிற்றம்பல நாடிகள் எனப் பெயர்க் கொண்டார்.
இவர் திருசெந்தூர் முருகனால் உபதேசம் பெற்று சித்தரானார். இவருக்கு 63 சீடர்கள். மடம் அமைத்து சீடர்களுடன் சோழ தேசத்தில் வாழ்ந்து வந்தவர்.
ஒரு முறை மடத்தின் சமயல்காரர் சித்தரும் சீடர்களும் உணவு உண்ணும் போது உணவில் நெய்க்கு பதிலாக தவறுதலாக வேப்ப எண்ணெய் பரிமாறி விட்டார்.
இருப்பினும் அனைவரும் எந்த வித முக சுழிப்பும் காட்டாமல் உணவு உண்டனர். ஒரு சீடர் மட்டுமே வேப்ப எண்ணெய் என உணர்ந்து அதை சமயல்காரனிடம் கூற. இதை கண்ட சித்தரும் “நமது திருக்கூடத்தில் இன்னும் பக்குவம் இல்லாதவரும் உள்ளனர் போலும்” எனக் கூறினார்.
இதை கேட்ட கண்ணப்பர் என்ற அச்சீடர் தமது பக்குவமின்மையை உணர்ந்து ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறி, வடக்கு சென்று தமது குருவை வணங்கி தவ வாழ்க்கை வாழ்ந்தார்.
சீர்காழி சிற்றம்பலநாடிகள் தாம் சமாதி நிலை அடையும் காலம் வந்ததை உணர்ந்து தாமும் தமது சீடர்களும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடையப் போவதாகவும் அதற்கு தகுந்த இடம் வழங்க வேண்டி மன்னரிடம் முறையிட்டார்.
மன்னன் காவிரி கரையில் மயிலாடுதுறைக்கு மேற்கே இடம் வழங்கினார். அனைத்து சித்தர்களுக்கும் தனித் தனியாக சமாதி மேடை அமைக்கப்பட்டது.
சித்திரை திருவோணத்தில் சீர்காழி சிற்றம்பல நாடிகளும் அவரது சிஷ்யர்களும் தமக்காக அமைக்கப்பட்ட மேடைகளில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலை அடைந்தனர்.
விவரம் அறிந்த கண்ணப்பர் தம் குருவை காண விரைந்து வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் சமாதிகள் கட்டப்பட்டு விட்டன. இதை கண்டு வருந்தி அழுது தம் குருநாதரை பணிந்தார்.
அப்போது பெருத்த ஓசையுடன் சிற்றம்பல நாடிகள் சமாதி வெடித்து வெளியே வந்தார். கண்ணப்பரை அணைத்து தம் மடியில் அமர்த்திக் கொண்டு மீண்டும் சமாதியானார்.
சித்தர் காடு கோவில் அமைப்பு
கருவறையில் சிற்றம்பல நாடிகளின் சமாதி அமைந்துள்ளது. அதன் மேல் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு உள்ளது.
அதை சுற்றி வெளிபுறத்தில் அவரின் சீடர்கள் 63 சித்தர்களின் சமாதி வரிசையாக உள்ளது. லிங்கங்கள் அதன் மேல் பிரதிட்டை செய்துள்ளனர்.
கருவறை சுற்றி விநாயகர், முருகன் பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
கருவறைக்கு பின் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், சனீஸ்வரன், மகாலட்சுமி, சப்த மாதர்கள் தனி சன்னதிகள் அமைந்துள்ளது.
சிற்றம்பல நாடிகள் குரு பூஜை
சீர்காழி சிற்றம்பல நாடிகளும் அவரின் சீடர்களும் ஜீவசமாதி ஆன நாளான சித்திரை திருவோணத்தில் வெகு சிறப்பாக குரு பூஜை நடத்தப்படுகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் வருகின்றது. தம்மை நாடி வரும் மக்களின் துயரை சூட்சும ரூபத்தில் இருந்து போக்கி வருகின்றார் சீர்காழி சிற்றம்பல நாடிகள்.
மயிலாடுதுறை சென்றால் தவறாமல் சித்தர் காடு சென்று, சித்த ரகசியம் தெரிந்த சிற்றம்பல நாடிகளை வணங்கி அருளாசி பெறுவோம்.
அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து 3 கி.மீ். தொலைவில் சித்தர் காடு.
நடைதிறப்பு: காலை 7 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை.
Eagerly waiting to visit the place