பராசக்தி மாரியம்மன் தல வரலாறு, உலக புகழ்பெற்ற பங்குனி பொங்கல் திருவிழா, கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் அதிசய நிகழ்வு.
அகில உலகையும் படைத்து அதனை ஆட்சிபுரிந்து வருகின்ற அன்னை ஆதி பராசக்தியின் மகிமைகள் பல உண்டு.
பல்வேறு ரூபங்களில் பல்வேறு திருநாமங்களில் கோவில் கொண்டு மக்களின் இடர்களை போக்கி வருகிறாள்.
தமிழகத்தின் உள்ள தென்மாவட்டங்களிலும் அவளின் அருளாட்சி மகிமைகள் நிறைந்த திருதலங்களில் பல உள்ளது.
அந்த வகையிலே விருதுநகர் மாநகரத்தை ஆட்சி புரிந்து வருகிறாள் அன்னை பராசக்தி மாரியம்மன் என்ற திருநாமத்தோடு.
பராசக்தி மாரியம்மன் தல வரலாறு
பலநூறு ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் விருதுப்பட்டியாக இருந்த போது இந்த கோவில் இருக்கும் இடத்தில் சந்தை ஒன்று இருந்தது.
அங்கு மாட்டு தீவனங்கள் விற்கும் கடையை ஒரு தம்பதியினர் நடத்தி வந்தனர். ஒரு நாள் யாரென்று அறியாத ஒரு சிறு பெண் குழந்தை தானாக அவர்களிடம் சென்று ஆதரவு கேட்டு தஞ்சம் புகுந்தது.
அவர்களும் தெய்வ கலை பொருந்திய அக்குழந்தைக்கு ஆதரவு அளித்து அங்கேயே தங்க வைத்தனர். பின் அன்று இரவே அக்குழந்தை இறந்து போனது. தாம் ஆதரவு அளித்த அக்குழந்தை இறந்ததை எண்ணி மனம் வருந்தினர்.
அப்பொழுது ஒரு அசரீரி ஒலித்தது தான் மாரியம்மன் எனவும் அவளுக்கு ஆதரவு அளித்ததால் அங்கேயே இருக்க போவதாகவும் அங்கு பீடம் அமைத்து தன்னை வழிபடுமாறு கூறியது. அவர்களும் அங்கே பீடம் அமைத்து மாரியம்மனை வழிபட துவங்கினர் என்பது கோவில் வரலாறு ஆகும்.
திருக்கோயிலின் அமைப்பு
1780-ஆம் ஆண்டு கோயில் இருக்கும் இடத்தில் பீடம் அமைத்து வழிபட துவங்கினர். 1859-ஆம் ஆண்டு பீடத்தில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
1918-ஆம் ஆண்டு முதன் முறையாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. 1923-ஆம் புதிய கட்டிடம் அமைப்பெற்று 1933 முதல் பங்குனி பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றது.
கோயிலின் முகப்பு கோபுரமானது வேறு எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பங்குனி பொங்கல்
விருதுநகரில் பிரசித்தமான திருவிழா என்றாலே அது பங்குனி மாதம் பராசக்தி மாரியம்மனுக்கு கொண்டாடப்படுகின்ற பங்குனி பொங்கல் திருவிழா ஆகும்.
பொங்கல் திருவிழாவிற்கான அறிவிப்பு திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமையில் சாட்டு முரசு கொட்டி திருவிழாவிற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
பின் அன்றிலிருந்து 21 நாட்கள் நேர்த்தி கடன்களை செலுத்தும் பக்தர்கள் வீட்டு வாசலில் வேப்பிலை தோரணம் மற்றும் கையில் காப்பு கட்டி விரதமிருக்க துவங்குவர்.
திருவிழா துவங்கி 21 நாட்களும் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அன்னையை தரிசிக்க வந்த வண்ணம் இருப்பர். 21 நாட்களும் கடுமையான விரதமிருந்து நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
அக்னி சட்டி எடுத்தல், கயிறு குத்து, வாய்ப்பூட்டு, கரகம் எடுத்தல், கரும்பு தொட்டில், தேர் இழுத்தல், வேடங்கள் போடுதல் முதலான நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
விரதமிருப்பவர்கள் 21 நாட்களும் உண்ணா நோன்பிருந்து. நேர்த்திக்கடன் செலுத்தும் முன்பு ஆக்கி வைத்தல் எனப்படும் படையல் அவரவர் வீட்டிலேயே செய்கின்றனர்.
பொங்கல், கொழுக்கட்டை, கருவாட்டு குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, முட்டை போன்றவற்றை புதிய மண் சட்டிகளில் சமைக்க செய்து படையல் இட்டு தாங்களும் உண்டப்பின் நேர்த்திக்கடன் செலுத்த செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுக்க திரண்டு வருகின்றனர்.
திருவிழாவின் போது பராசக்தி மாரியம்மனும், வெயிலுகந்த அம்மனும் மலர்கள் மற்றும் பழங்களால் ஆன வசந்த மாளிகையில் வந்து அமர்கின்றனர்.
கோவிலில் நடைபெறும் அதிசய நிகழ்வு
விழா துவங்கி கடைசி ஏழு நாட்கள் இருக்கும் போது கோவிலில் உட்கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.
அப்பொழுது கொடி துணியுடன் ஐந்து வகையான சாதங்கள் வைத்து துணியில் கட்டி ஏற்றுகின்றனர். திருவிழா முடிந்து கொடியை இறக்கும் போது அந்த சாத மூட்டையை திறக்கின்றனர்.
ஏழு நாட்களுக்கு பின்னும் அந்த ஐந்து வகை சாதமானது கெடாமல் இருக்கின்றது என்பது தற்பொழுதும் நிகழ்ந்து வரும் அதிசயமாகும். பராசக்தி மாரியம்மனின் சக்தியால் இந்நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை நடந்து வருகிறது.
வேண்டிய வரமளிப்பாள் பராசக்தி மாரியம்மன்
விருதுநகரை ஆட்சி செய்யும் அன்னை பராசக்தி மாரியம்மன் மக்களின் பிணிகள் அனைத்தையும் போக்குகிறாள். நல்ல மழையும் தந்து, அம்மை, காலரா போன்ற நோய்களில் இருந்து காத்தும் வருகிறாள் அன்னை பராசக்தி மாரியம்மன்.
வேண்டிய வரங்களை வேண்டிய வண்ணம் அளிப்பதால் வருடா வருடம் நேர்த்திக்கடனாக வரும் அக்னி சட்டியின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.
ஊடரங்கு உத்தரவினால் இந்த 2020-ஆம் வருடம் பங்குனி திருவிழா நடைபெறாமல் போனது வருத்ததிற்குரியது.
உலகை காக்கும் அன்னை பராசக்தி மனது வைத்தால் இந்த நோய் பிணிகள் அனைத்தும் அகலும். எனவே எல்லோரும் வீட்டில் இருந்தபடியே விருதுநகர் பராசக்தி மாரியம்மனை பிராத்தனை செய்வோம்.
Very pretty
Wow
Dev nalla information
Puthumaiyana thavagal.. Arumai