CSK vs RR இடையே நேற்று நடந்த போட்டி சுவாரஸ்யம், அடிதடி என விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடைபெற்றது.
ஹிமாலயா ஸ்கோர் என்றாலும் மொக்கை ஸ்கோர் என்றாலும் கடைசி ஓவரில் பரப்பரப்பை கிளப்பி வெற்றி பெறுவதில் சிஎஸ்கேவுக்கு நிகர் சிஎஸ்கே தான்.
கடைசி ஓவர் கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்று விட்டார் கேப்டன் கூல் தோனி. அப்படி என்ன நடந்தது தோனியே கோபப்படும் அளவிற்கு?
இந்த ஐபிஎல் சீசன் முழுவதுமே அம்பயர்கள் போக்கு அனைவரிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
வீரர்கள் மூலம் மேட்ச் பிக்சிங் நடந்த காலம் முடிந்து இப்போது அம்பயர் மூலம் மேட்ச் பிக்சிங் நடக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது.
ஆர்சிபி-எம்ஐ அணிகளுக்கு எதிராக கடைசி பால் நோபால் கொடுக்கப்படவில்லை. அஸ்வினை ஓவருக்கு ஏழு பந்துகள் வீசவைத்தனர்.
நேற்றைய போட்டியில் நோபால் வீசி அதை மெயின் அம்பயர் அறிவித்தும் லெக் அம்பயர் நோபால் கிடையாது என மறுத்துவிட்டார்.
ஆனால் ரீப்ளேயில் பந்து இடுப்புக்கு மேல் சென்றது தெளிவாகத் தெரிந்தது. அம்பயரின் இந்தச் செயலால் கடும் அதிருப்தி அடைந்தார் தோனி.
நேராக மைதானத்திற்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏன் முதலில் நோபால் கொடுத்தீர்கள். பிறகு ஏன் மறுத்தீர்கள் என ஆக்ரோசமாக வாதாடினார்.
இருப்பினும் அம்பயர்கள் கடைசி வரை மூன்றாவது அம்பயரின் உதவியைக் கேட்டகவில்லை. நோபால் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இவ்வளவு ஓரவஞ்சனைகளுக்கு இடையேயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
போட்டி முடிந்தவுடன் விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் சென்றதால் தோனியை லெவல் 2 குற்றவாளியாக அறிவித்தனர்.
ஐபிஎல் விதிமுறைகள் 2.20-ன் படி ஸ்பிரிட்டுக்கு எதிராக செயல்படுவது குற்றம். இதனால் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதித்தனர்.