நல்ல நினைவுகளுடனும், பாடத்துடனும் நாடு திரும்புகிறோம் – ரோஹித்
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால் 10 தொடர்களைத் தொடர்ந்து வென்ற இந்திய அணிக்கு இது முட்டுக் கட்டையாக அமைந்துவிட்டது.
ஒரு நாள் தொடரின் இடையில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியை வழி நடத்தினார்.
மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் தொடக்கமே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி 212 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய மன்றோ 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி நல்ல துவக்கத்தை கொடுத்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்களில் இந்திய அணி தோற்றது.
தோல்வி குறித்து ரோஹித் கூறியதாவது
இலக்கிற்கு மிக அருகில் சென்று தோற்றது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கடைசி நேரத்தில் நியூசிலாந்து சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர்.
ஒரு சில சிறிய தவறுகளால் தோல்வியை தழுவினோம். தோல்வி அடைந்தாலும் நல்ல நினைவுகளுடனும், பாடத்துடனும் நாடு திரும்புகிறோம் எனக் கூறினார்.