Poomaram: பூமரம் எனும் மலையாள திரைப்படத்தை பற்றியே இப்பதிவு. முழுக்க முழுக்க கல்லூரியில் நடைபெறும் கலை போட்டிகளை (cultural) கொண்டே படம் முழுவதும் நகரும். மேலும் இது கல்லூரி சார்ந்த படம்தான்.
அதற்காக நீங்கள் வழக்கமான கல்லூரி சார்ந்த படங்களின் பாணியை மூளைக்கும் மனதிற்கும் கொண்டு வந்துவிடாதீர்கள்.
அப்படி நீங்கள் நினைத்தவாறே இத்திரைப்படத்தை அனுகினால் நிச்சயம் சிலருக்கு ஏமாற்றமும், சிலருக்கு ஆச்சரியமும் கிடைக்க அநேக வாய்ப்பிருக்கிறது.
கதைக்கரு:
மலையாளப்படம் என்றதும் எதார்த்தம் நிறைந்தது, இயல்பானது என அடிப்படையாக உள்ள அத்தனை கட்டமைப்புக்குள்ளும் இத்திரைப்படம் அடங்கும்.
கேரளத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கல்லூரிகளுக்கான புகழ்பெற்ற கலைப்போட்டியாக ஒரு போட்டியுள்ளது. அக்கலைபோட்டியை அக்கலைவிழாவை மஹாராஜாஸ் எனும் வரலாற்று சிறப்புமிக்க கல்லூரி ஒன்று நடத்துகிறது.
அப்போட்டிகளில் வென்று overall championship பட்டத்தையும் கோப்பையையும் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு பலகல்லூரிகள் களமிறங்கினாலும், மஹாராஜாஸ் மற்றும் செயின்ட் தெரேசா என்ற இரு கல்லூரியையும் பிராதனப்படுத்தியே திரைப்படம் நகர்கிறது.
செயின்ட் தெரேசா கல்லூரி தொடர்ந்து அக்கோப்பையை வென்று வருகிறது. இம்முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் மஹாராஜாஸ் பல ஆண்டுகளுக்கு இம்முறை கோப்பையை வென்று விடலாம் என்றும் களத்தில் இறங்குகிறார்கள்.
திருவிழா:
சிறப்பு என்னவென்றால் இவ்விரு கல்லூரிகளையோ, இவ்விரு கல்லூரி சார்ந்த மாணவர்களையோ எதிருக்கு எதிர் நிற்பதை போல் காட்டாமல் மோதிக்கொள்வதைப்போல காட்டாமல் திரைப்படம் முழுக்க அவர்களை ஒரு நிகழ்வாகவே காண்பித்திருக்கிறார்கள்.
பூமரம் (Poomaram) திரைப்படம் முழுவதும் ஒருவித மென்மைத்தனம் வழிந்தோடுகிறது. இக்கலைப்போட்டியை ஒரு திருவிழாவை போல காண்பித்திருக்கிறார்கள்.
திருவிழாவில் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளும், கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளிலும் நிகழும் என்பதை நாமறிவோம். அதை இயக்குனரும் நன்கு அறிந்துவைத்தாற்போல காட்சிபடுத்தியுள்ளார்.
அதேசமயம் அவற்றை மிகைப்படுத்தாமல் நிதானமாகவும் குறைந்த அளவுமே திரைப்படத்தில் காண்பித்துள்ளார்.
இசையெனும் பிரம்மிப்பு:
கதை, கதாப்பாத்திரங்களைக்கொண்டு அதற்கேற்ற நிலத்தில் அதற்கேற்ற காட்சியமைப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கதைக்கு துணையாக திரைப்படம் முழுவதும் இசை இரைச்சலாக அல்லாமல் இசையாகவே பயணித்திருக்கிறது.
திரைக்கதைக்கு நிகராக துணையாக பின்னனி இசையும் பாடலும் அமைந்திருக்கிறது என்று சொல்லுமளவிற்கு இசை திரைக்கதைக்கு பங்காற்றியுள்ளது.
பூமரத்தை விரும்பாமல் போககூட வாய்ப்பிருக்கிறது ஆனால் பூமரம் தந்திருக்கும் இசையை பாடலை நிச்சயம் விரும்பாமல் திரைப்படத்தை விட்டு நகர முடியாது.
மொழி புரியவில்லையெனினும் அந்த குரல்களில் உள்ள ரீங்காரம், அவைக்கு பலமேற்றும் காட்சிகள் என அத்தனை பாடல்கள் வரும் சூழலும் அழகாக அமைகிறது.
இசையின் பங்கில்லாமல் வெறும் குரல்கள் மட்டுமே பாடல்களை ஒலிக்கும் கணத்தில் கூட நாம் இசையை தேடாத அளவு பாடல் பாடுபவர்களின் குரல் அமைந்திருக்கிறது.
இறுதியும் அன்பும்:
கதாபாத்திரங்கள் எந்த இடத்திலும் ஹிரோயிசத்தை கையிலேடுக்கவில்லை. அவர்கள் அந்தந்த கல்லூரியின் மாணவர்களாகவுமே திரைப்படம் முழுக்க காட்சியளிக்கிறார்கள்.
எந்த கல்லூரி போட்டியை வென்றது? தோற்ற கல்லூரிகள் தோல்வியை எப்படி ஏற்றுக்கொண்டன? என்பதையெல்லாம் பூமரம் சற்று தொலைவில் வைத்துவிட்டு ஒரு அற்புதமான நிகழ்வை இறுதிக்காட்சிகளில் நிகழ்த்திருக்கிறார்கள். அவ்விறுதி காட்சியிலும் ஒலிஒளிப்பதிவுகள் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றன.
பூமரம் (Poomaram) என்ற மென்மையான திரைப்படம் கவிதை, கதை, பாடல், இசை, நட்பு, தோல்வி, வெற்றி மாணவப்பருவம், தலைமை, பொறுமை என பெருவாரியான நற்பண்புகளை கதையில் நிகழ்த்தினாலும், படத்தின் இறுதிக்காட்சியில் பூமரம் நிகழ்த்திய அந்த அன்பின் காட்சிக்கு அற்புதம் என்றே அபூர்வம் என்றோ பெயர் வைக்காமல் படத்தை பற்றிய பதிவை முடிக்க முடியவில்லை. திரைப்படத்தை பார்த்த பின் அந்த இறுதிக்காட்சியின் அபூர்வம் புரியும்.
பூமரம், ஹாட்ஸ்டாரில் (hotstar) இலவசமாக ஓடிக்கொண்டிருக்கிறது.