Kamal Haasan; குடும்பத்திற்கே கொரோனாவா? தனித்தனி வீடுகளில் கமல், ஸ்ருதி, அக்ஷரா! கொரோனா வைரஸ் காரணமாக கமல், ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் தனித்தனி வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் தனித்தனி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் இருக்கிறது. சீனாவில் தொடங்கி 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டும் 562 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 12 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கு நாடெங்கும் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரவர் தங்களது வீட்டிற்குள்ளே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தோடு இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், குடும்பத்தோடு யாரும் தனித்தனியாக இருக்க வேண்டாம் என்பது கட்டாயம் இல்லை.
இந்த நிலையில், கமல் ஹாசன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோ என்று கேள்வி எழும் வகையில், அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், கொரோனா எச்சரிக்கையை யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்ற வேண்டும். நான் லண்டனிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். ஆதலால், தனி வீட்டில் வசிக்கிறேன்.
என்னுடன் யாரும் கிடையாது. எனது செல்லப் பூனைக்குட்டி கிளாரா மட்டுமே உடன் இருக்கிறது. வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களை கூட அனுப்பிவிட்டேன்.
எனது அம்மா சரிகா மும்பையில் தனி வீட்டில்தான் வசிக்கிறார். அப்பா கமல், தங்கை அக்ஷரா ஆகியோரும் தனித்தனி வீடுகளில்தான் வசிக்கின்றனர் என்றார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஸ்ருதி ஹாசன் லண்டனிலிருந்து இந்தியா வந்தார். கொரோனா அறிகுறி இல்லாத போதிலும் இந்தியா வந்ததிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு என் வீடாக இருந்த கட்டிடத்தை தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.