Theatre ReOpen; ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு: திரையரங்கு உரிமையாளர்கள்! வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட 4 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
அதோடு, சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் விளைவாக, பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.
சினிமா துறையும் இதுவரை காணாத வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது.
இந்த 4 மாதங்களில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, திரையரங்கு உரிமையாளர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர்.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலை திரும்புவதால், திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினந்தோறும் 4 காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், 2 காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளனர்.
இதையடுத்து, திரையரங்குகள் திறக்கப்படும் பட்சத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ திரையரங்குகள் திறந்தால் முதலில் வெளியாவது தளபதி விஜய்யின் மாஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.