Suriya; இன்னும் 30 நாள்: டுவிட்டரில் சிங்கம் சூர்யா டிரெண்டிங்! நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில், டுவிட்டரில் சிங்கம் சூர்யா ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சூர்யாவின் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. எப்போதும், சமூக அக்கறை கொண்டவர். தனது அகரம் ஃபவுண்டேசன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார். மேலும், பல உதவிகளை செய்து வருகிறார்.
இவ்வளவு ஏன், தனது சொந்த செலவில் 100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆம், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் பறக்கும் விமானத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
அந்த பாடல் வெளியீட்டிற்காக முதல் முறையாக இதுவரை விமானத்தில் சென்றிராத 100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றிச் சென்று அழகு பார்த்துள்ளார். அதோடு, வெய்யோன் சில்லி என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், நேற்று டுவிட்டரில் சிங்கம் சூர்யா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டானது.
இதில், சூர்யா நடித்த படங்களையும், பாடல்களையும் பதிவிட்டு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இப்போதே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.