கபடி, தாயம், கிரிக்கெட் விளையாடாதீங்க: கிராமத்துக்காரனாக சூரி வேண்டுகோள்! கிராமத்தில் பலரும் வீட்டை விட்டு வெளியில் வரும் நிலையில், நடிகர் சூரி அவர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று நடிகர் சூரி வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, 32 பேர் பலியாகியுள்ளனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து காமெடி நடிகர் சூரி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவரது மகன் மற்றும் மகளும் பேசியுள்ளனர்.
அப்போது பேசிய சூரியின் மகள் கூறுகையில், நாங்கள் சின்ன பசங்கதான் நாங்கள் சொல்வதையும் கேளுங்கள். கொரோனா வைரஸால் நிறைய பேர் பலியாகிறார்கள். இந்தியா, வெளிநாடு என்று கொரோனா உலகம் முழுவதும் பரவிவிட்டது.
டாக்டரும் போலீசும், உங்ககிட்ட வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தானே கேட்குறாங்க. ஆனால், அத கூட நீங்க பண்ண மாட்டீரீங்க. அவங்களுக்கும் பேமிலி இருக்கு. அவங்களையும் விட்டு விட்டு நமக்காக வந்து போராடுறாங்க.
அப்போ அவங்கதான் நமக்கு பெரிய கடவுள். மெயினா கிராமத்துக்காரங்களுக்குதான் நான் சொல்லுறேன். ஏனா, அவங்கதான் வீட்டை விட்டு வெளியில் வந்து கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் என்று விளையாடுறாங்க.
இத கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருங்க. அப்போதான் இந்தியாவ காப்பாத்த முடியும். உங்களையும் காப்பாத்தனும், எங்களையும் காப்பாத்தனும் அப்படின்னா அது உங்களது கையில்தான் இருக்கிறது. மற்றவர்களுடன் பழகக் கூடாது.
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், தாங்கிக் கொண்டே தான் ஆகவேண்டும். எப்போதுமே சாப்பிடும் போதும், தூங்கும் போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருங்க, ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சூரியின் மகன் கூறுகையில், கையெடுத்து கும்பிடுகிறேன் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். போலீஸ், டாக்டர்ஸ்க்கு நன்றி என்றார்.
இறுதியாக பேசிய சூரி கூறுகையில், பச்ச குழந்தைங்களுக்கு தெரியுறது கூட உங்களுக்கு தெரிவதில்லை.
நான் குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்களுக்கு தான் சொல்கிறேன். ஒரு கிராமத்துக்காரனாக நான் சொல்கிறேன்…இவ்வளவு பாதிப்பு வந்த பிறகும் கூட நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாவடி, மண்டபம், வேப்ப மரத்துக்கு அடியில் உட்காந்து தாயம் விளையாடுறீங்க.
சின்னப் பசங்க கபடி விளையாடுறீங்க. வீட்டுக்கு ஒரு போலீஸ் என்று காவலுக்கு போட முடியாது. அவ்வளவு போலீஸ் நம்மிடம் இல்லை.
தம்பிங்களா, அண்ணன்களா, பெரியவங்க எல்லோருக்கும் சொல்றேன், லேடிசும் பக்கத்துல இருக்குர 10 வீட்டுக்கும் போய்ட்டு வந்துகிட்டு இருக்கீங்க.
தயவு செய்து வீட்டுக்குள்ளேயே உட்காருங்க. இந்த வியாதில இருந்து தப்பிக்கணுமென்றால், நம்ம கண்ட்ரோலாக இருந்தால் மட்டுமே முடியும்.
எவ்வளவு பேர் நமக்காக இரவு பகலாக பணியாற்றுகிறார்கள், கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சொல்கிறேன் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வராதீர்கள் என்று மனவேதனையுடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.