Thalapathy Vijay; விஜய்யின் வீர செயல்: ஒரேயொரு Phone Call தான்: பாதுகாப்பாக சென்னை வந்த 11 பெண்கள்! தூத்துக்குடியில் சிக்கித் தவித்த 11 பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக உதவி செய்துள்ளார்.
தூத்துக்குடியில் சிக்கித் தவித்த 11 பெண்கள் பத்திரமாக சென்னை திரும்ப விஜய் உதவி செய்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் லாக்டவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த லாக்டவுன் காரணமாக வெளியூர்களுக்கு சென்றவர்கள் அங்கேயே தங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த தேவிகா என்ற தனது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்களுடன் தூத்துக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
தேவிகா தவிர மற்ற அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு சென்ற அவர்கள் திருமணம் முடிந்த நிலையில், அங்குள்ள பேருந்து நிலையங்களிலும், கோயில்களிலும் தங்கியுள்ளனர். கையிலிருந்த பணமும் செலவாகியுள்ளது. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடியுள்ளனர்.
இது தொடர்பாக, தேவிகா தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியிடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸி ஆனந்திடம் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த தகவல் நேரடியாக விஜய் காதுக்கு சென்றுள்ளது. உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மன்ற ரசிகர்களிடம் 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அரசிடம் முறையான அனுமதி பெற்ற பிறகு அந்த 11 பெண்களும் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தளபதி விஜய்யின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், விஜய்க்கும் அவரது மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே விஜய், கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.30 கோடி அளித்திருந்தார். மேலும், வறுமையில், வாடும் தனது ரசிகர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வீதம் செலுத்தியுள்ளார் என்று ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.