வனிதாவின் டாட்டூ: அன்பின் சின்னமாக பதிக்கப்பட்ட புகைப்படம்! வனிதா தனது கையில், வருங்கால கணவரின் பெயரை டாட்டூ குத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் பிரபலமான நடிகை வனிதா தனது கையில், வருங்கால கணவரான பீட்டர் பால் என்பவரது பெயரை டாட்டூ குத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக வனிதா சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.
ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதோடு, சர்ச்சையிலும் சிக்கினார்.
இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றதோடு, தனது சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், பிக் பாஸ் வனிதா வேறு தற்போது இருக்கும் வனிதா வேறு என்று அனைவருக்கும் புரிய வைத்தார்.
இதையடுத்து, அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், தனது சமையல் குறிப்பு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தான் கடந்த 17 ஆம் தேதி வனிதா 3ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆம், பீட்டர் பால் என்பவருடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
வரும் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
கொரோனா தாக்குதல் காரணமாக மிகவும் எளிய முறையில், வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன்னிலையில், வனிதாவின் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்னதாக வனிதா தனது வருங்கால கணவர் பீட்டர் பாலின் டாட்டூவை தனது கையில் குத்தியுள்ளார். இதே போன்று பீட்டர் பாலும், வனிதாவின் டாட்டூவை கையில் குத்தியுள்ளார்.
கையில் குத்தியிருந்த டாட்டூவை புகைப்படம் எடுத்தவற்றை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, அன்பின் சின்னமாக பதிக்கப்பட்டது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வனிதாவின் டாட்டூ என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.