Home சினிமா கோலிவுட் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த விசுவின் உயிர் பிரிந்தது!

பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த விசுவின் உயிர் பிரிந்தது!

1
5772
Visu Passed Away

Visu; பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த விசுவின் உயிர் பிரிந்தது! நடிகர் விசு உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் விசு. கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக, மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக இயக்குநர் சிகரம் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இவரது இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பாலும், சமூக, குடும்பக்கதையை மையப்படுத்தியே திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பதில், இவரை மிஞ்ச யாருமில்லை.

சன் தொலைக்காட்சியில் விசு அரங்கேற்றிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்களே உண்டு. இதிலிருந்து விலகிய விசு ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்ற நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதே போன்று கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார்.

1977 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கால்பதித்து வந்தார். விசு, தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என்று பல திறமைகளை கொண்டவராக திகழ்ந்துள்ளார்.

தில்லு முல்லு படம் முதல் நல்லவனுக்கு நல்லவன், அவள் சுமங்கலிதான், கெட்டி மேளம், சிதம்பர ரகசியம், வனஜா கிரிஜா, எல்லாம் அவன் செயல், மணல் கயிறு 2 வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

விசு இயக்கத்தில் வந்த சம்சாரம் அது மின்சாரம் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.

விசுவிற்கு சுந்தரி என்ற மனைவியும், லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய 3 மகள்களும் இருக்கின்றனர். மூவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

மேலும், விசுவிற்கு கிஷ்மு, ராஜாமணி மற்றும் குரியகோஸ் ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். மூவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வந்தது.

அப்போது இது குறித்து பேசிய விசு, இந்த தகவல் பொய்யாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேலை உண்மையாக இருந்தால், இந்தப் படத்தின் கதாசிரியரான என்னிடம் ரீமேக் உரிமையை பெற்ற பிறகே நெற்றிக்கண் படத்தை எடுக்க முடியும்.

அப்படியில்லை என்றால், தனுஷ் மீது வழக்கு தொடரப்படும் என்று ஆவேசமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிறுநீரக செயலிழப்பு காரணமாக இன்று மாலை விசு உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

விசு உயிரிழந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் விசுவின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here