சரித்திர நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ | Fidel Castro Life History in Tamil. செல்வந்தனின் மகனாக பிறந்த பிடல்காஸ்ட்ரோ மாபெரும் தலைவனாக மாறிய கதை.
Fidel Castro Life History
உலக வரலாற்றில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு ஒரு நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 1926-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் கியூபாவில் பிறந்தார்.
ஸ்பானியரான இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ, கியூபாவிற்கு வேலை தேடி வந்து பின்னாளில் மிகப்பெரும் பண்ணையாளர் ஆனார்.
25 ஆயிரம் ஏக்கர் கரும்பு தோட்டத்தில் 400 பேருக்கு வேலை தரும் அளவிற்கு மிகப்பெரும் செல்வந்தர் பிடல் காஸ்ட்ரோவின் தந்தை.
பிடல்காஸ்ட்ரோ கல்வி
1930-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏஞ்சல் காஸ்ட்ரோவையும் பாதித்தது. இந்நிலையில் தனது பள்ளி படிப்பை முடித்த பிடல், மேல்படிப்பை ஹவானாவில் உள்ள பெலன் பள்ளியில் முடித்தார்.
மேற்படிப்பிற்கு பின் ஹவானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தார். அரசியல் மற்றும் கம்யூனிசத்தில் மிகப்பெரும் ஈடுபாடு கொண்டவரானார்.
கியூபா விடுதலை போராட்டம்
இலக்கியவாதியும் ஸ்பெயினுக்கு எதிரான கியூபா விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த வருமான புரட்சியாளர் ஹோசே மார்த்தியை தனது அரசியல் தந்தையாக கொண்ட பிடெல், ஆர்தொடாக்ஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
கார்ல் மார்க்ஸ், லெனின், எங்கெல்ஸ் போன்றவர்களின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் படித்து முதலாளித்துவத்தினால் கியூபாவின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிகளை அறிந்துகொண்டார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த கியூப தேசத்தின் வறுமைக்கு நடுவே ஒரு செழிப்புமிக்க கரும்புத் தோட்டத்தில் செல்வந்தரின் மகனாக வாழ்ந்து வந்த ஃபிடெல் தன் சுகங்களை எல்லாம் உதறிவிட்டு, தேச விடுதலைக்காக துப்பாக்கி ஏந்திப் போராடத் தயாரானார்.
பாடிஸ்டாவின் வீழ்ச்சி
அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாடிஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி, கியூபாவில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஒரு ஆட்சியை அமைக்கும் தனது சரித்திரப் பயணத்தை தொடர்ந்தார்.
முதற்கட்டமாக மான்கடா படைத்தளத்தை கைப்பற்றும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. பாடிஸ்டாவினால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் துவண்டு விடவில்லை பிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்கா எனும் பூதத்திற்கு எதிரான தனது அடுத்தகட்ட தாக்குதலைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.
விடுதலைக்குப் பின்னர் மெக்ஸிகோவிற்கு சென்று அங்கு ஒரு புரட்சிப் படையை உருவாக்கினார். இவ்வாறுதான் ஜூலை 26 இயக்கம் உருவானது.
சேகுவேரா சந்திப்பு
மெக்சிகோவில் தன்னைப்போலவே மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களில் பற்று கொண்ட இளைஞர் ஒருவரை சந்தித்தார், அவர்தான் சேகுவேரா!
சேவும் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்தார். இவர்களது புரட்சிப்படை கொரில்லா போர் முறையை பயன்படுத்தி 1959 ஆம் ஆண்டு பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தியது.
பிரமராக பொறுப்பு
ஃபிடல் கியூபாவின் பிரதமராக பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியது. தொழில்களும் வியாபாரங்களும் தேசியமயமாக்கப்பட்டன.
அமெரிக்காவிற்கு சொந்தமான யுனைட்டட் ஃப்ரூட் கம்பெனியின் கையிலிருந்த கியூப நிலங்கள் பிடுங்கப்பட்டு, நாட்டு மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இலவச கல்வி மற்றும் மருத்துவம்
கியூப மக்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்க அரசு கியூபாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஆனால், அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை பிடல்.
பொருளாதாரத் தடையை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் எதிர்கொண்டு கியூபாவை பாட்டாளி வர்க்கத்தினருக்கான நாடாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.
கல்வி மற்றும் மருத்துவத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அமெரிக்கா என்னும் அரக்கனுக்கு எதிராக சாட்டையை சுழற்றி, கியூபாவை உழைக்கும் வர்க்கத்தினரின் நாடாக வடிவமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்த ஃபிடல் காஸ்ட்ரோ 2016-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்து இன்றும் கியூப மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார்.