பரியேறும் பெருமாள் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது. இன்னும்சில இடங்களில் இப்படம் வெளியாகவில்லை. எப்படியோ ஒருவழியாக இப்படத்தை திரையில் கண்டு, இவ்வளவு தாமதமாக விமர்சனம் எழுதியுள்ளேன்.
இப்படத்தைப் பற்றி பலவிமர்சனங்கள் வந்துவிட்டது. எனவே படத்தை பற்றி கூறுவதைவிட, படம் ஏற்படுத்திய விளைவுகளை இந்த விமர்சனத்தில் கூறியுள்ளேன்.
தீக்குச்சி
பரியேறும் பெருமாள் அனைத்து ஜாதியினரும் பார்த்தே தீரவேண்டிய ஒரு புரட்சிப் படம். இது ஒரு தீக்குச்சி தான். சுடராக மாறுவது வருங்கால இயக்குனர்கள் மத்தியில் தான் உள்ளது.
வீழ்ச்சியும், ஜாதிவெறியும்
1957-ல் மாயாபஜார் படம் வெளியானது. தமிழ் சினிமாவும், ஹாலிவுட் சினிமாவும் ஒரே தொழில்நுட்ப வளர்ச்சியில் சமஅளவில் இருந்தன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்க தமிழ்சினிமாவும், தமிழ் சமூகமும் வளரவேண்டிய நேரத்தில் வீழ்ச்சியை சந்தித்தது.
80-கள் மற்றும் 90-களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அதில் காதல் கதைகள் அதிக அளவில் வெளியாகின. அதனால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் காதல் மோகம் தொற்றியது.
அதே நேரம், ஒவ்வொரு ஜாதிகளின் பெருமை பேசும் படங்கள் வெளியாகின. ஜாதிகளை வைத்து அரசியல் கட்சிகள் உருவெடுத்தன. ஓட்டிற்காக ஒவ்வொரு ஜாதியையும் ரத்த வெறியுடன் வளர்த்து விட்டனர்.
(ஜாதிய புரட்சி படங்கள் வெகுசில படங்களே வெளிவந்தன. அதிலும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். ஒரு தரப்பினர் முகம் சுழிக்கும் படியாககூட இருக்கும்.)
விளைவு 20ம் நூற்றாண்டிலும் ஜாதி அழிக்க முடியாத சக்தியாக மாறியுள்ளது. ஜாதிவெறி கொண்டவர்களின் மனநிலையை மாற்றுவது கடினம். ஆனால், வளரவிடாமல் தடுப்பது எளிது.
ஜாதிய நிலை
பரியன் படத்தில் வரும் ஒரு முதியவர், ஜாதிய கொலையை கொலசாமிக்கு செய்வதாக கூறுவார். அதேநேரம் தழ்ந்தவனிடம் அடிவாங்கிய வேதனையில் தற்கொலையும் செய்துகொள்வார். அம்முதியவர் போன்ற மக்களை மாற்றுவது கடினம். அவர்கள் சாகும்வரை அதே மனநிலையுடன் இருப்பார்கள். அம்மனநிலையிலேயே செத்து மடிவர். ஆனால் வருங்கால இளைஞர்களை மாற்றுவது எளிது.
அடிமையாக இருப்பவர்கள், சரிக்குச் சமமாக இருக்க நினைப்பது புரட்சி. அதேநேரம் அடக்கி ஆண்டவரை, மீண்டும் அடக்க நினைப்பது குரூர மனப்பான்மை.
அப்படி நினைத்தால், இறுதிவரை அடிமைகள் ஒழிய மாட்டார்கள். எவரேனும் ஒருவர் அடிமையாக வாழும் சூழல் உருவாகும். இப்படி எண்ணம் கொண்ட இரு தரப்பினருமே ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.
வெளிச்சம்
பரியேறும் பெருமாள் படத்தின் முடிவுவே அதற்கான வெளிச்சம். கடைசிவரை நாயகத்தான் நான் இருக்க வேண்டும் என நினைத்தால், இங்க எதுவும் மாறாது.
இதை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் படி கூறினால் மட்டுமே ஜாதிகள் ஒழியும். ஒழிக்க முடியும்.
ஜாதிய தூண்டல்
தூங்கி எழுந்து பல்துலக்கும்போதே கொலை செய்வோம் (கருணாஸ்) மற்றும் ஸ்டைலா கெத்தா கால்மேல கால்போட்டு உட்காருவேன் (கபாலி). இப்படியனா வசனங்களைக் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் ஜாதியை ஒழிக்க முடியாது. இன்னும் நெருப்பாக வளர்க்கும்.
வளரும் தலைமுறையினர் மத்தியில் ஜாதியை வளர விடாமல் தடுப்பது, வருங்கால அரசியல்வாதிகள் மத்தியிலும், இயக்குனர்கள் கையிலுமே உள்ளது. நீங்கள் ஜாதியை ஒழிக்க நினைப்பவரா? வளர்க்க நினைப்பவரா?
பரியேறும் பெருமாள் ஜாதிய அரிதாரம் பூசியவர்களுக்கான சாட்டையடி.