Thalapathy Vijay Master Movie; விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார்? என்பதை புரிந்து கொண்டேன்: சாந்தனு! மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு விஜய் உடன் இணைந்து நடித்தது குறித்தும், எப்படி இந்தளவிற்கு அவர் உயர்ந்தார் என்பதையும் புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார் என்பதை தான் புரிந்து கொண்டதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் நடிப்பில் வந்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் மூலம் அவரது மகனாகவே அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி ஆனார்.
கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் ஹீரோவானார். அதன் பிறகு வருடத்திற்கு ஒரு படம் வீதம் 2017 ஆம் ஆண்டு வரை நடித்து வந்தார்.
தற்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த ஆண்டில் சாந்தனு நடிப்பில் வானம் கொண்டட்டும் படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது மாஸ்டர் படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, நாசர், மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து, விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார் என்பது குறித்தும் சாந்தனு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் மாஸ்டர் தான் தனது முதல் படம். நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது என்பது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
சிறு வயதிலிருந்தே விஜய் அண்ணாவை தனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் போது அவரது படத்தில், அவருடன் இணைந்து ஈஸியாக நடித்து விடலாம் என்று கணக்கு போட்டேன்.
ஆனால், அவருக்கு அருகில் நிற்கும் போது தான் அது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு அப்போது தான் புரிய ஆரம்பித்தது.
ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பதற்கு முன்பாக தன்னை எப்படி தயார் செய்து கொள்கிறார் என்பதை அருகில் இருந்து பார்த்தேன்.
அப்போது தான் நடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
அதோடு, இவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார், எந்தளவிற்கு தன்னை தயார் செய்து கொண்டிருப்பார் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.
இந்த லாக்டவுன் காரணமாக கொஞ்சம் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. படம் எப்போது வந்தாலும் சிறப்பான சம்பவம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.