குடியுரிமை சட்டம்: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை மீண்டும் வாபஸ் பெறப்போவதில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் அமித்ஷா கூறியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துள்ளது. அதில் ஒரு சில இடங்களிலேயே கலவரமாக மாறியுள்ளது.
ஆனால், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளதாகப் பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் அதிதீவிரமாகப் போராட்டம் நடக்கும் இடங்கள் மூன்று மட்டுமே.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜே.என்.யூ., ஜாமியா மிலியா ஆகிய கல்லூரிகளில் தான் போராட்டம் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் 400 கல்வி நிறுவனங்கள் உள்ளது. அங்கெல்லாம் இப்போராட்டம் நடைபெறவில்லை. எனவே இந்தியா முழுவதும் போராட்டம் நடக்கிறது எனக் கூறுவது தவறான விஷயம்.
மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது கலவரங்கள் ஏற்பட்டால் போலீசார் தடுக்கத்தான் செய்வார்கள். கை மீறிப்போகும் வரை எங்களால் காத்திருக்க முடியாது.
போலீசார் மீது, சில மாணவர்கள் கற்களை வீசியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தை மீண்டும் வாபஸ் பெறப்போவதில்லை. எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம் என அமித்ஷா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார்.
மாணவர்கள் போராட்டம்
ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாமில் 6 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
புதிய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே இந்த போரட்டத்தின் முக்கிய காரணம் எனக்கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.