லோக்சபா அமளி: ஹர்ஷ்வர்தன் – மாணிக்கம் தாகூர் மோதல். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையேயான சர்ச்சை பேச்சுகள் தொடர்பாக லோக்சபாவில் பெரும் அமளி.
சமீபத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் இன்னும் சில காலங்களில் பிரதமர் வெளியே வந்தால் இளைஞர்கள் வேலை கிடைக்காத கோபத்தில் அவரை கம்பால் அடிக்க தயங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடியும் பதிலடியும்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நேற்று லோக்சபாவில் பேசும்போது ராகுல் காந்தியை ட்யூப்லைட் என்று பொருள்படும் வகையில் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று லோக்சபாவில் பாஜக எம்பிக்கள் ராகுலுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனிடையே மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில் ராகுலின் வார்த்தையை கண்டிப்பதாக கூறினார்.
பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எழுந்து நின்று கோஷமிட்டுக் கொண்டே ஹர்ஷ்வர்தன் இருக்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர்.
அருகில் இருந்த காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் மிக அருகில் செல்லவும் பிஜேபி எம்பிக்கள் ஹர்ஷ்வர்த்தனை சுற்றி நின்று கொண்டனர் பாதுகாப்பு வளையம் போல. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்தி கருத்து
இதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி, வயநாட்டில் மருத்துவக்கல்லூரி இல்லாததை பற்றி கேட்டால் ஹரஸ்வரதன் அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்.
தான் பேசினால் பிஜேபிக்கு பிடிக்காது என்பதால் பிரச்சனை செய்கின்றனர். மாணிக்கம் தாகூர் எதுவும் செய்யவில்லை வேண்டுமானால் வீடியோ பாருங்கள் எனக் கூறினார்.
சபாநாயகரிடம் புகார்
அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், காங்கிரசின் விரக்தி அவர்களை வன்முறையை கையில் எடுக்க வைக்கிறது என்றார்.
இரு கட்சிகளும் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். மீண்டும் அமளி நிலவியதால் சபாநாயகர் அவையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.