கேரளாவில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை. கேரளா மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கேரளா: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணனின் மகள் தேவிகா (14). பட்டியலினத்தை சேர்ந்த இவர் 10-ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளா முழுவதும் இணையதளம் வழியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் தேவிகாவின் வீட்டில் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று மாலை 3.30 மணி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலிருந்த ஆளில்லா வீடொன்றில், எரிந்த நிலையில் தேவிகாவின் சடலம் கிடைத்துள்ளது. மண்ணெண்ணெய் பாட்டில் ஒன்றும் அவர் அருகில் கிடந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். அவர் இரண்டு கிடந்த வீட்டில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது அதில் “நான் போகிறேன்” என்று மட்டும் எழுதியிருந்தது.
தேவிகாவின் தந்தை பாலகிருஷ்ணன் கூறுகையில், தேவிகா இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் விரக்தியில் இருந்ததாகவும், தொலைக்காட்சியை சரிசெய்துத் தருமாறு தன்னிடம் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு உடல்நிலை சரியில்லாததாலும் ஊரடங்கு காரணமாகவும் தான் வேலைக்குச் செல்ல இயலவில்லை என்றும் டி.வியை பழுது பார்க்கக்கூட தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்கள் இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அதை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி கேரளாவில் உள்ள மாணவர் அமைப்புகள் பல ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.