டெல்லியில் உள்நாட்டு விமானங்கள் துவக்கம் என டயல் (DIAL) தெரிவித்துள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் டி-3 இல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
புதுடில்லி: டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (டயல்), டெல்லி விமான நிலையத்தில் முதலில் டி-3 இயங்குதளத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக இன்று முதல் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையம் இயக்கம்
இந்த ஊரடங்கிற்கு பின்னர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 இல் விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று செய்தி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (டயல்), டெல்லி விமான நிலையத்தில் முதலில் டி-3ஐ இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் இயங்கும்
தற்காலிகமாக உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே மீண்டும் துவக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய ஒப்புதலை விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எம்.ஆர் குழுமத்தின் தலைமையிலான டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் சில வரைமுறைகளை வகுத்து தனது திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த திட்டத்தில், விமான நிலையத்தில் அனைத்து உணவு, பானங்கள் மற்றும் சில்லறை கடைகளையும் ஒரே இடத்தில் கூட்டமாக செயல்படுவதை தவிர்ப்பதற்காகவும்,
விமான நிலையத்திற்கு உள்வரும் அனைத்து பொருட்களும் “புற ஊதா கிருமி நீக்க பாதையை” பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையிலான வரைமுறைகள் இருக்கும்.
விஸ்டாரா மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் 1 மற்றும் 2 வாயில்கள் வழியாக மட்டுமே விமான நிலையத்திற்குள் நுழைவார்கள் என்று திட்டம் வரையத்துள்ளது.
மேலும் இந்த இரண்டு விமான நிறுவனங்களும் அவற்றில் ஏ, பி மற்றும் சி வரிசைகளை மட்டுமே கொண்டிருக்கும்.
ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா பயணிகள் நுழைவு வாயில்கள் 3 மற்றும் 4 ஐப் பயன்படுத்துவார்கள்.
இந்த பயணிகள் பின்னர் டி, ஈ மற்றும் எஃப் வரிசைகளுக்குச் செல்வார்கள், அங்கு இந்த இரண்டு விமான நிறுவனங்களின் ஊழியர்களும் வரையறையின்படி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ.ஏர் பயணிகள் செக்-இன் செய்வதற்காக ஜி மற்றும் எச் வரிசைகளில் நின்று இந்த இரண்டு விமானங்களின் ஊழியர்களை நோக்கி கேட்-5 வழியாக வரிசையில் நுழைவார்கள்.
மற்ற அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களின் பயணிகள் 5 ஆம் வாயில் வழியாக நுழைந்து எச் வரிசையில் செல்வார்கள் என்று அந்த திட்டம் தெரிவித்துள்ளது.
அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களின் பயணிகளும் 6,7 மற்றும் 8 வாயில்களைப் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைவார்கள்.
இந்த விமானங்களின் ஊழியர்கள் டெர்மினல் 3-இல் செக்-இன் செய்வதற்காக ஜே, கே, எல் மற்றும் எம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள்.
கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் இந்தியா முழு ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது, இதுவரை நோய் தொற்றுகள் எண்ணிக்கை 42,533 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,373 ஆகவும் உள்ளது.
அனைத்து வணிக பயணிகள் விமானங்களும் ஊரடங்கு காலம் முடியும் வரை நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சரக்கு, மருத்துவ சேவைக்கான விமானங்களுக்கு மட்டும் டி.ஜி.சி.ஏ அனுமதித்த விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றன.
“ஊரடங்கு முடிந்ததும், வர்த்தக பயணிகளின் விமானங்கள் டெர்மினல் 3 இலிருந்து மட்டுமே இயங்கும். பின்னர், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன், மற்ற டெர்மினல்கள் பயன்படுத்தப்படும்” என்று அதிகாரி கூறினார்.
மனித தொடர்பைக் குறைக்க பல்வேறு விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் பரிவார்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் மெனுக்களை பயன்படுத்த உத்தரவிடப்படும் என்று டயல் அறிவித்துள்ளது.