தற்சார்பு இந்தியா திட்டம், 5-ம் கட்ட அறிவிப்புகள் என்னென்ன என்பதை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக விளக்கினார்.
புதுடில்லி: கடந்த 4 நாட்களாக விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உணவு பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஏழைகளுக்கும், பசியால் வாடுவோருக்குக்கும் உணவளிப்பது அரசின் கடமையாகும்.
இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்:
ஜன்தன் கணக்கு மூலம் இதுவரை 20-கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை 6.81 கோடி பேர் இலவச சிலிண்டர் பெற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இதுவரை 4,113 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள், சோதனை கிட் ஆய்வுகளுக்கு 550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 11.08 கோடி ஹைட்ரோகிலோராக்ஸிகுயின் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2.2 கோடி தொழிலாளர்கள் 3,950 கோடி பண உதவி பெற்றுள்ளனர். 8.18 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் நேரடியாக அவர்களது வாங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இனி செயல்படுத்தப்படும் திட்டங்கள்:
ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கும். 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும். சொத்துக்கள் பதிவு எளிமையாக்கப்படும்.
அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தொழில்புரிவதை எளிமையாக்குவதற்கான அடுத்தகட்ட சீர்திருத்தங்களை அரசு அறிவிக்கவுள்ளது.
வர்த்தக சர்ச்சைகளுக்கான தீர்வுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். 15,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு கூடுதலாக 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு புதிய சேனல்கள்:
இத்திட்டத்தின் அடிப்படையில் 1-12 வகுப்புகள் வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு சேனல் துவங்கப்படும். மே 30 முதல் 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் படிப்பை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பாடங்கள் செயல்படுத்தப்படும். பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே 3 சேனல்கள் உள்ளன. மேலும் 12 சேனல்கள் புதிதாக துவங்கப்படும்.
இ-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புதிய பாடபுத்தகங்கள் சேர்க்கப்படும். ஸ்வயம் பிரபா சேனல்கள் மூலம் E-learning எனப்படும் மின்னணு கற்றல் ஊக்குவிக்கப்படும்.
ஆன்லைன் கல்வி முறையை அணுகுவதற்கு PMeVIDYA திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு ஆய்வகங்களும் அமைக்கப்படும்.
திவால் திட்டத்தில் தளர்வுகள்:
கொரோனா காரணமாக புதிதாக திவால் நடவடிக்கைகள் எடுப்பது ஓராண்டிற்கு நிறுத்திவைக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் திட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திவால் தீர்வு வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். கொரோனா நடவடிக்கையால் ஏற்பட்ட கடன்கள் வாரகடனாக வரையறுக்கப்பட்டது.
சிறு நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கடன்களின் வட்டி குறைக்கப்படும். குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தவிர்த்து மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்:
குறிப்பிட்ட சில துறைகளிலும் குறைந்தது ஒரு பொதுத்துறை நிறுவனம் இருக்கும். தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் எவை என்பதை மத்திய அரசு அறிவிக்கும்.
தனியார் முதலீட்டிற்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் பற்றியும் அரசு அறிவிக்கும்.
மாநில பேரிடர் மீட்பு நிதியாக 11,092 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு ஏப்ரில் முதல் வாரத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் மாநிலங்களுக்கு வரி வருவாய் பங்காக 46,038 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு:
மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிடிபியில் 3% ஆக இருந்த வரம்பு 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரம்பு உயர்வால் மாநிலங்கள் 4,28 லட்சம் கோடி வரை நிதி திரட்ட முடியும்.
பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்திற்கு 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னரே எடுக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களுக்கான மொத்த தொகை 1,92,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கு பிரதமர் அறிவித்த தொகை 15,000 கோடி ரூபாய். சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடனுதவியாக ரூபாய் 5000 கோடி ஒதுக்கப்பட்டது. வருங்கால வாய்ப்பு நிதி சலுகைக்களுக்கான நிதி ரூபாய் 2,800 கோடி, வாங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 கட்டங்களின் நிதி விவரங்கள்:
முதல் கட்டத்தில் 5.94 லட்சம் கோடி 2-ம் கட்டத்தில் 3,10 லட்சம் கோடி மூன்றாம் கட்டத்தில் 1.50 கோடி 4 மற்றும் 5 ஆவது கட்டங்களில் 48,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 கட்டங்களில் மொத்தமாக 11.02 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர முன்னரே எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1.92 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஊக்குவிப்பிற்காக மத்திய ரிசர்வ் வாங்கி 8.01 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.