நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம் என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த பதிவில் அவர் கூறியதாவது
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு
மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
23 மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்திய தொழிலாளர்களின் உழைப்பு கொண்டாடாமல் போவது போல அவர்களின் வாழ்வாதார இறப்பும் கண்டுகொள்ளப்படாமல் சென்று விடக்கூடாது என்பதே வலியுறுத்துவதற்காக தான்.
நான் கடிதம் எழுதியதற்கு அடுத்த நாள் மக்களிடம் “லாக்டவுன்” என்கின்ற மிகக் கடுமையான ஒரு புதிய அறிவிப்பு செய்யப்பட்டது.
லாக்டவுன் என்றால் என்ன என்று புரிவதற்கான அவகாசம் கூட கொடுக்கப்படாமல், “டீமானிடைசேசன்” போன்றே இந்த புதிய அறிவிப்பையும் நாடு கேள்விப்பட்டது.
அந்த அறிவிப்பைக் கேட்ட பிறகு ஒரு நிமிடம் திகைப்பிற்குள்ளானாலும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கின்ற முறையில் நீங்கள் சொல்வது சரியானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் உங்களை நம்பலாம் என்கின்ற முடிவுக்கு வந்தேன்.
டீமானிடைசேசன் போதும் கூட நான் உங்களை நம்பலாம் என்று தான் முடிவு எடுத்தேன். ஆனால் காலம் எனது முடிவை தவறு என்று உணர்த்தியது.
உங்களது முடிவும் தவறு என்றே காலம் கட்டியம் கட்டி சொன்னது.
முதலாவதாக இந்தப் பெரும் தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் நீங்கள்தான் என்று உங்களிடம் நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் நானாகிய, நானும் பேரிடர் காலத்தில் உங்கள் வழிகாட்டுதலின் படி செல்வதற்கு தயாராக உள்ளேன்.
இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு அமைந்தது போல ஒரு பெரும் கூட்டம் வேறெந்த நாட்டின் தலைவருக்கும் அமையவில்லை.
நீங்கள் சொன்னாலே அக்கூட்டம் கேட்கின்றது
இன்றைய சூழலில் இந்த தேசமே நம்பிக்கையுடன் எழுந்து நின்று பிரதமர் அலுவலகம் சொல்வதைக் கேட்பதற்கு தயாராக உள்ளது.
இந்த நாட்டிற்காக தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நாம் நமது நன்றியினை கைதட்டல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன உடன் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து கொண்டோர் கூட கைதட்டி உற்சாகம் ஊட்டினார் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்களுடைய ஆணைக்கும் விருப்பத்திற்கு இணங்கி நடக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை, உங்களுக்கு அடி பணிகின்றோம் எனத் தாங்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.
என் மக்களின் தலைவனாக உங்களைக் கேள்வி கேட்பது எனது ஜனநாயக கடமை ஆகும். எனவே எனது கேள்விகளில் நெறிமுறைகள் ஏதும் இல்லாமல் இருப்பதாக நீங்கள் கருதினால் தயைகூர்ந்து மன்னிப்பீராக…
நான் மிகவும் அச்சப்படும் ஒரு விஷயம் என்னவெனில் டீமானிடைசேசன் நேரத்தில் நடந்தது போன்ற ஒரு பெரும் தவறை இம்முறை அதைவிட மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான்.
டீமானிடைசேசன் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் அடித்து பிடுங்கியது. ஆனால் சரியாக திட்டமிடப்படாத இந்த லாக்டவுன் நம் அனைவரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் ஆபத்தை நோக்கி செல்கிறது.
ஏழை மக்களுக்கு உங்களைத் தவிர கேட்பதற்கு வேறு யாரும் இல்லை ஐயா.
ஒருபுறம் நீங்கள் செல்வந்தர்களை குடும்பத்தினருடன் இரவுநேர கேளிக்கைகளை காண அழைக்கின்றார்கள். மறுபுறம் ஏழைகளை அவமானமாக உணரும் ஒரு சூழலில் தள்ளுகிறீர்கள். உங்களுடைய உலகம் எண்ணெய் விளக்குகளை தங்கள் பால் கனிகளில் ஏந்திக் கொண்டு இருக்கின்ற பொழுது, ஏழைகள் தங்கள் வீட்டில் உணவு செய்வதுகூட எண்ணெய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக நடந்த மக்களுடனான உங்கள் இரண்டு உரையாடல்களும் மக்களை அமைதிப் படுத்தும் நோக்கத்தில் அமைந்தது. அது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று கூட. ஆனால் அமைதியாக இருப்பதை விட மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற மனநிலை உத்திகள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பால்கனியில் வந்து நின்று கைதட்டி தங்களுக்கு இருக்கும் கவலையை மறப்பதற்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால் தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறு ஓலைக் குடிசை கூட இல்லாத ஏழை எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும்.
தனது உழைப்பினாலும் வியர்வையாலும் இரத்தத்தாலும் இந்த நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக பெரும் அடித்தளமாக இருக்கும் அடித்தட்டு மக்களை ஒதுக்கி வைத்து வெறும் பால்கனி வாழ் மக்களின் பால்கனி அரசாக தாங்கள் தங்கள் அரசை நிர்வகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தினசரி செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வேண்டுமாயின் தினசரி கூலிகள் குறித்து செய்திகள் வராமல் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களின் பங்கு அளப்பரியது. இந்த நாட்டின் மிகப்பெரிய பெரும்பான்மையினர் அவர்கள்தான் இந்த நாட்டில் மிகப் பெரும் பங்கும் அவர்களுடைய தான்.
அடித்தளத்தை அசைத்துப்பார்த்தால் மேல்தட்டு சிதறிவிடும் என்பது தான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. அறிவியலும் அதை ஒத்துக் கொள்ளும்.
மேல்தட்டில் இருப்பவர்கள் அடித்தட்டில் இருப்பவர்கள் மீது திணித்த முதல் தொற்று நோயும் நெருக்கடியும் இதுதான்.
அய்யா அதிலும் மிக முக்கியமாக தாங்கள் அடித்தட்டு மக்களை காப்பாற்றுவதே தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துவது போலவே இருக்கின்றது.
கோடிக்கணக்கான தினக் கூலிகள், வீட்டுவேலை செய்பவர்கள், டாக்ஸி டிரைவர்கள், மிதிவண்டி ஓட்டுனர்கள், சாலையோர சிறு கடை வைத்திருப்பவர்கள் என அனைவரும் ஏதேனும் ஒரு சிறு வெளிச்சமாவது தங்கள் வாழ்வில் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் மேற்தட்டு, நடுத்தட்டு மக்களின் கோட்டைகளை காப்பாற்றுவதை மட்டும் நமது குறிக்கோளை வைத்திருக்கின்றோம்.
நடுத்தர மக்களையோ அல்லது மேல்தட்டு மக்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
நான் உங்களைக் கேட்டுக் கொள்வது எல்லாம் சமூகத்தில் எவரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவருக்கும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான்.
என்னை பொறுத்தவரை எந்த ஒரு மனிதனும் பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பது தான் அதை தான் நீங்கள் செய்துவிட வேண்டும் என நான் உங்களிடம் பரிந்துரை செய்கின்றேன்.
கோவிட் 19 தொடர்ந்து பல பேரை தொற்றி பரவும் என்றாலும் நாம் பசி சோர்வு இறப்பு எனும் பெரும் பிணிகளை பெற்றெடுக்கும் கருவறையை உருவாக்கிக் கொண்டிருக் கின்றோம்.
பசி, சோர்வு, இழப்பு Hunger(H), Exhaustion (E), Deprivation(D) என்பதை சுருக்கி HED’20 எனும் பிணி இன்று பார்ப்பதற்கு சிறியதாக தெரிந்தாலும் கோவிட் 19 விட மிகக் கொடிய உயிர்க்கொல்லி ஆக இருக்கும்.
கோவிட் 19 நம்மிடமிருந்து மறைந்த பின்னரும் இந்த HeD’20 என்னும் பிணி நம்மிடம் இருக்கும் சரிவுகளை சரி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்று புரிந்து கொள்வதை விட்டு, தாங்கள் எப்போதும் கையில் எடுக்கும் தேர்தல் நேரத்து பிரச்சார யுக்திகளிலேயே இருக்க விரும்புவதை நாம் காண்கின்றோம்.
பொறுப்புள்ள நடவடிக்கைகளை மக்கள் கையிலும் வெளிப்படைத் தன்மையை மாநில அரசுகளின் கைகளிலும் கொடுத்துவிட்டு நீங்கள் உங்களுக்கு வசதியான ஒரு நிலையிலிருந்து கொள்கிறீர்கள்.
இந்திய நாட்டிற்காக அல்லும் பகலும் அயராமல் தங்கள் நேரத்தையும் அறிவையும் பயன்படுத்தும் பல்வேறு அறிவாளிகளுக்கு தாங்கள் இதையே உணர்த்துகிறீர்கள்.
அறிவாளிகள் என்று சொல்லியது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஏனெனில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை என்பது எனக்கு தெரியும். ஆனால் நாம் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன் அவர்கள் அறிவாளிகள் என்பதும் எனக்கு தெரியும்.
நீதியையும் சமநிலையையும் வளர்ச்சியையும் நோக்கி நம் அனைவரையும் வழிகாட்டுவது அறிவு மட்டுமே
பிரச்சார யுக்திகளின் மூலமாக மக்களை உற்சாகத்தில் மட்டுமே வைத்திருக்க முயலும் உங்கள் நிறுவனத்தின் கவனமும் நோக்கமும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புறம் தள்ளுகிறது.
இது போன்ற ஒரு தொற்று நோய் பரவி இருக்கின்ற காலத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை முதன்மையாக இருக்க வேண்டிய ஒரு நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு மத ரீதியான கூட்டங்களை தடுத்திருக்க வேண்டிய உங்கள் அரசு செய்யவில்லை. இதுபோன்ற இடங்களை சமூக தொட்டிகளை அதிகம் பரவ செய்தது இதுபோன்ற அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட உயிர் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது.
உலக சுகாதார அமைப்பிற்கு சீன அரசு, டிசம்பர் 8-ம் தேதி தான் கரோனா பாதித்த முதல் நோயாளி குறித்த தகவலை தெரிவித்து, கரரோனாவின் தீவிரத்தையும், வீரியத்தையும் மக்களும் அரசாங்கங்களும் புரிந்து கொள்ள ஓரளவு காலம் தேவைப்பட்டது என்பதை கருத்தில் கொண்டாலும், பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த உலகம் இதுவரை கண்டிராத அளவு சேதம் விளைவிக்க போகும் அபாயத்தை உணர்ந்து.
ஜனவரி 30, இந்தியா தனது முதல் கரோனா நோயாளி குறித்த விவரங்களை வெளியிட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதை கண்கூடாக பார்த்த பின்பும் நாம் பாடம் கற்கவில்லை. திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண்விழித்தபோது நிலைமையின் தீவிரம் உணர்ந்து 4 மணிநேர கால அவகாசம் கொடுத்தது.
1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம்.
நான்கு மாதங்கள் யோசிக்கவும் செயல்படவும் இருந்தபோதிலும், அந்த நான்கு மாதங்கள் கடந்து திடீரென தீவிரம் புரிந்து 1.4 பில்லியன் மக்களுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
பிரச்சனைகள் தீவிரம் அடையும் முன்பே தீர்வுகளை தயார்நிலையில் வைப்பவர்கள் தான் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் மன்னிக்கவும், ஆனால் இந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது.
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு @PMOIndia @narendramodi pic.twitter.com/LvgVUgUZYz
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2020
மக்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான எதிர்மறை விமர்சனங்களை கையாள்வதிலும் ,அத்தகைய விமர்சனங்களுக்கு பதில் விமர்சனம் அளிப்பதிலும் உங்கள் அரசும், அரசு அதிகாரிகளும் செலவிட்ட நேரத்தையும், பலத்தையும் சற்று திசைதிருப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் செலவழித்து இருக்கலாம்.
தேசத்தின் நலனை முன்னிறுத்தி சில நல் உள்ளங்களின் தன்னலமற்ற குரல்களை தேடி கண்டுபிடித்து அவற்றை செவிமடுக்காமல் அக்குரல்களை மாற்று குரல்களாலும் நையாண்டிகளாலும் புதைத்து இக்குறளுக்கு சொந்தமானவர்களை தேசத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தும் பணியில் அயராது ஈடுபட்டுவருகின்றனர் உங்கள் சேனை படையினர்.
தைரியம் இருந்தால் என்னை இந்த தேசத்திற்கு எதிரானவன் என்று வேண்டுமானால் அழைத்துப் பாருங்கள்.
இவ்வளவு பெரிய தீவிரமான ஒரு தேசிய இக்கட்டிற்கு சரியான முறையில் தயாராகவில்லை என்று மக்களை குறை சொல்ல முடியாது.
ஆனால் உங்களை குறை சொல்லலாம், சொல்லுவோம்.
மக்களின் அடிப்படை வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்காக தானே இந்த அரசும் அரசு அதிகாரிகளும்.
இதுபோன்ற பேரிடர்கள் இரண்டு காரணங்களுக்காக வரலாற்றின் பக்கங்களில் பதிவிடப்படுகின்றன.
ஒன்று, இதன் விளைவால் ஏற்படும் உயிர் சேதமும் நோயின் வழிகளும். இரண்டாவது, இதன் தாக்கம் ஏற்படுத்தும் சமூக கலாச்சார மாற்றங்கள் மக்களுக்கு கற்றுதரும் பாடம் நீண்ட காலத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த கொரோனா நம்மை தீண்டியது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
இதுவரை இதுபோன்ற இயற்கை நம்மிடம் சீரியது இல்லை
உண்மையான அக்கறையுடன் இருக்கும் குரல்களை கேட்க வேண்டிய காலமிது அனைத்து பிரிவினை கோடுகளையும் அளித்து சங்கநாதமிட்டு, அனைவரையும் உங்கள் பக்கத்தில் வைத்திருந்து உதவிகளை பெற வேண்டிய நேரம் இது.
மக்கள் பலமே நாட்டின் பலம். எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு அவற்றை ஒன்றாகக் கடந்து உள்ளோம், இனியும் கடப்போம் ஒன்றாக, சிதறி பிரிந்தல்ல..
இப்பேரிடர் நம் அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர எந்தப் பக்கத்தில் யாரும் பிரிந்து நிற்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான நேரமல்ல.
நாங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றோம். இருந்தாலும், உங்களுடன் இருக்கின்றோம்.
ஜெய்ஹிந்த்
கமலஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மையம்