புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாராள குணத்தால் கேரளா அரசாங்கத்தின் கோவிட்-19 நிவாரண பணிக்காக 50,000 கிடைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து 2 மாதங்களுக்கு முன்பு அஸ்வினி குமார் என்ற இளைஞர் வேலை தேடி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் பிலாஸ்பூரிலிருந்து வந்த 43 பேருடன் சேர்ந்து, அந்த தொழிற்ச்சாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த 44 பேரும் இன்னும் சில பணியாளர்களுடன் இணைந்து பணம் திரட்டி 50,000 ரூபாய் வரை சேர்த்து கேரளா முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 21 நாட்கள் ஊரடங்கிற்கு பின்னர் தற்போதுதான் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் மற்றவர்களுடன் இணைந்து 50,000 வரை நிதி அளித்துள்ளனர்.
இவர்களில் ஒருவரான பிரதீப் இதுபற்றி கூறுகையில் “சிறு குழந்தைகள் கூட தங்கள் சேமிப்பு பணத்தை இந்த நேரத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர்.
அதனால் நாங்களும் நிதி அளிப்பதென முடிவு செய்தோம். கேரள மக்கள், எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை சிறந்த முறையில் நடத்துவார்கள்.
அதனால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் பங்களிப்பை அளிக்க முடிவு செய்தோம்”. என்று கூறியுள்ளார். மேலும் இது அவர்களுக்கு சிரமமான காரியமாக இல்லையா? என கேட்டதற்கு,
“இல்லை. எங்கள் சம்பளத்தில் கொஞ்சம் மிச்சம் இருந்தது. எங்களுக்கு உணவு, இருப்பிடம் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் எங்கள் நிறுவனமே பார்த்துக்கொண்டது. எங்களுக்கு எந்த குறையுமில்லை” என்று அஷ்வினி குமார் தெரிவித்தார்.
இவர்கள் வேலை செய்யும் oxyeasy நிறுவன தலைவர் பி.மோகன்தாஸ் கூறுகையில், “இவர்கள் அனைவரும் என்னிடம் வந்து தாங்கள் நிவாரண நிதிக்கு பணம் தர விரும்புவதாக தெரிவித்தனர்.
எவ்வளவு தரப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, 5000, 500, 1000, 2000 என ஒவ்வொருவரும் கூறியதை கேட்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்”. என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கின் நிலைமையை சமாளிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் தனது தொழிலாளர்களை ஒரு குறையும் இன்றி பார்த்துக்கொண்டு அந்த முதலாளியின் குணமும், வறுமையிலும் பிறருக்கு உதவும் குணம் கொண்ட அந்த 44 தொழிலாளிகளின் குணமும் பாராட்டுதற்குரியது.